பிரதமர் மோடி உக்ரைன் செல்வது ஏன்? என்ன நடக்கும்?
--எஸ்.சையத் இப்ராஹிம்
உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நீடித்து வருகிறது. உக்ரைனை சுற்றி வளைத்து ரஷ்யா தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் முயன்றும், இதுவரை பலன் கிடைக்கவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக ஆகஸ்ட் 23ஆம் தேதி உக்ரைன் செல்கிறார்.
உக்ரைனுக்குச் செல்லும் நரேந்திர மோடி, சுமார் 30 ஆண்டுகளாக போரால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு 32 ஆண்டுகளுக்குப் பின் செல்லும் முதல் இந்தியத் தலைவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
உக்ரேனிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 23 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந் நாட்டின் தலைநகர் கிய்வ் செல்கிறார். மேலும் இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து 3-வது முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பின் நரேந்திர மோடி 2-வதாக சென்ற முக்கிய நாடு ரஷ்யா. அந்த நாட்டிற்கு சென்று கிட்டத்தட்ட 2 மாதங்களுக்குள் அவர் உக்ரைன் செல்வது சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவின் முயற்சிக்கு ஒத்துழைக்காத ரஷ்யா!
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை எச்சரித்த போதும், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கிட்டத்தட்ட நடுநிலையே வகித்து வருகிறது. போரை நிறுத்த இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு ரஷ்யா ஒத்துழைப்பு தரவில்லை.
கடந்த ஜூலை மாதம் ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். அப்போது உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த அவர் வேண்டுகோள் விடுத்ததாகக் கூறப்படுகிறது. உக்ரைனில் மருத்துவமனைகள் மீதான ரஷ்யாவின் தாக்குதல் குறித்து பேசிய மோடி, "அப்பாவி குழந்தைகள் கொல்லப்படும் போது, இதயத்தில் ரத்தம் வரும், அந்த வலி மிகவும் பயங்கரமானது" என்று கூறினார். ஆனால், இதனை ரஷ்யா பொருட்படுத்தவே இல்லை.
"உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் உலகின் மிக ரத்தக்களரி குற்றவாளியை மாஸ்கோவில் கட்டிப்பிடித்தை பார்க்கும் போது அமைதி முயற்சிக்கு ஏற்பட்ட பெரிய அடி" என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆன்லைனில் எழுதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தொடங்கிய பின் முதன்முறையாக உக்ரைனுக்கு மோடி பயணம் மேற்கொள்கிறார். சுமார் 32 ஆண்டுகளுக்குப் பிறகு உக்ரைனுக்கு ஒரு இந்தியத் தலைவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
"இந்தியா, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் சமமான மற்றும் சுதந்திரமான உறவுகளைக் கொண்டுள்ளது, மேலும் இந்த கூட்டாண்மைகள் தனித்து நிற்கின்றன" என்று இந்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் தன்மயா லால் செய்தியாளர்களிடம் கூறினார்.
பிரதமர் மோடியின் இந்த பயணம், உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்தும் பேச்சுவார்த்தையை வலியுறுத்தும் வாய்ப்பை இந்தியாவுக்கு அளித்துள்ளதாக சர்வதேச நாடுகள் கருதுகின்றன.
"ரஷ்யா நீண்டகால பாரம்பரிய நட்பு நாடு. உக்ரைனும் இந்தியாவுடன் மிகவும் நட்புறவு கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை பராமரிப்பது மிக சவாலான பணி. குறிப்பாக உக்ரைன் மேற்கு நாடுகளிடம் இருந்து பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. ஆனால் ரஷ்யாவுடனான உறவுகளை விரிவுபடுத்தவும், பலப்படுத்தவும் இந்தியா ஒரு போதும் தவறியதில்லை" என்றும் வெளியுறவுத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், மோடியின் உக்ரைன் பயணம், மாஸ்கோவுடனான இந்தியாவின் உறவை பாதித்துவிடுமோ என இந்திய அரசு ஒருபோதும் கவலைப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ராணுவ, வர்த்தக மற்றும் ராஜதந்திர உறவுகள் ஏற்கனவே ஆழமாக உள்ளன. இந்தியா தனது 40% எண்ணெய் மற்றும் 60% ஆயுதங்களை ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்கிறது. மேலும் கணிசமான அளவு நிலக்கரி, உரம், தாவர எண்ணெய் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களையும் இறக்குமதி செய்கிறது.
உக்ரைன் மீதான படையெடுப்பால் ரஷ்யாவை மேற்கு நாடுகள் புறக்கணித்ததை இந்தியா சாதகமாகவே பார்த்தது. ஏனெனில் இது இந்தியாவை ரஷ்யா மேலும் நெருங்கி வர தூண்டியது. மேலும், ரஷ்யாவை அந்நியப்படுத்துவது, அந்த நாடு இந்தியாவின் முக்கிய போட்டியாளரான சீனாவை நெருங்கி செல்லக் கூடும் என்பதில் டெல்லி எச்சரிக்கையாக இருந்து வருகிறது.
புவிசார் அரசியல் கணக்கீட்டை மேலும் சிக்கலாக்கும் வகையில், மோடியின் ரஷ்யா நட்பு நிலைப்பாடு மற்றும் புதினுடனான அவரது சந்திப்பால் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் எரிச்சல் அடையாமல் இல்லை. இருந்தாலும், ரஷ்யா - இந்தியா இடையிலான நட்பில் விரிசல் ஏற்படுவதை மேற்கத்திய நாடுகளும் விரும்பவில்லை, காரணம், சீனாவின் அசுர வளர்ச்சி.
"இந்தியா தன்னை ஒரு சமாதான நாடாக முன்னிறுத்தி மனிதாபிமான உதவிகளில் ஈடுபட முயற்சிக்கும்" என்று அசோகா பல்கலைக்கழகத்தின் சர்வதேச கல்வி துறை உதவிப் பேராசிரியரான அமித் ஜுல்கா கூறினார்.
ஆனால், டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், கியேவில் அமைதித் திட்டத்தை இந்தியா வெளியிடாது என்று கூறியது, ஆனால் அமைதி தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு எப்போதும் இந்தியா ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளது.
மோடி நிகழ்ச்சி நிரலில் என்ன உள்ளது?
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரைத் தவிர, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
- பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் போருக்குப் பிந்தைய உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்புவதில் இந்தியாவின் பங்கு ஆகியவை குறித்து விவாதிக்கப்படலாம்.
- போருக்கு இடையே இந்திய மாணவர்களை பத்திரமாக வெளியேற்றிய உக்ரைன் அரசாங்கத்திற்கு மோடி நன்றி தெரிவிக்கலாம்.
இது போன்ற பல தகவல்கள் வெளியானாலும், பிரதமர் நரேந்திர மோடியின் உக்ரைன் பயணம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.