தியாகிகளை மதிக்கவில்லை என கூறும் ஆளுநர், சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுப்பது ஏன்? - அமைச்சர் பொன்முடி கேள்வி!
தியாகிகளை மதிக்கவில்லை என கூறும் ஆளுநர், சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுப்பது ஏன் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரரும் மூத்த இடதுசாரித் தலைவருமான என். சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட தமிழ்நாடு ஆளுநர் மறுத்துள்ள விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திரப் போராட்டத் தியாகியும் மூத்த இடதுசாரி தலைவருமான என். சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முடிவெடுத்திருக்கும் நிலையில், அது தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என். ரவி மறுத்தார்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சங்கரய்யாவிற்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்க சிண்டிகேட் மற்றும் செனட் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுபப்பட்டது. சங்கரய்யா பற்றி ஆளுநருக்கு தெரியாவிட்டால் கேட்டு இருக்க வேண்டும். படிப்பை நிறுத்திவிட்டு சுதந்திர போரட்டத்தில் ஈடுபட்டார். 9 ஆண்டு காலம் சிறையில் இருந்தவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் மறுத்து இருக்கிறார். ஆளுநர் எந்த சட்டத்தையும் மதிப்பதில்லை. திராவிடமாடல், சமூகநீதி பற்றி பேசுபவர்களை ஆளுநருக்கு பிடிக்கவில்லை.
சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விருதுடன் அவருக்கு வழங்கப்பட்ட தொகையை ஏழைகளுக்கு வழங்க கொடுத்து விட்டார். சுதந்திர போராட்ட வீரருக்கு மரியாதை கொடுக்கவில்லை என கூறும் ஆளுநர், சுதந்திர போராட்ட த்தில் கலந்து கொண்ட சங்கரய்யாவிற்கு கெளர டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் தரவில்லை. தற்போது 102 வயதில் வாழ்ந்து வரும் சுதந்திர போராட்ட வீரருக்கு ஏன் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க மறுக்கிறார் என ஆளுநர் பதில் சொல்ல வேண்டும். ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்திலே எவ்வளவு பொய் கூறினார் ஆளுநர்.
ஆளுநர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற செல்ல காரணம், ஆளுநர் கோப்புகளில் கையெழுத்து போடாமல் இருப்பது தான். தமிழக அமைச்சரவை சொல்வதை செய்ய வேண்டியது தான் ஆளுநர் வேலை. மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் மாநில ஆளுநர் செயல்படுவது கண்டிக்கதக்கது. வேண்டும் என்றால் தேர்தலில் நின்று வெற்றி பெற்று, நினைத்ததை செய்யுங்கள், இதைவிட மோசமான ஆளுநர் இதுவரை யாரும் இல்லை.
இப்போதெல்லாம் பட்டமளிப்பு விழாவில் என்னை பேசவிடுவதில்லை. சிறப்பு விருந்தினரை மட்டுமே பேசவைக்கிறார். ஆளுநர் தரப்பில் இருந்து இது தொடர்பாக எந்த கடிதமும் வரவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை யாராலும் திராவிடத்தை அசைக்க முடியாது.
இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.