”போர் நிறுத்தம் தொடர்பான டிரம்பின் கருத்திற்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை..?”- செல்வப் பெருந்தகை கேள்வி!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் தொடா்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் சிறப்பு விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா, வெளியிறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றினர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”இந்திய நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை யார் ஆளுகிறார்கள்..? போர் நிறுத்தத்தை தாங்கள் தான் செய்கிறோம் என்று அமெரிக்கா கூறுகிறது. இதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்காமல் ”ட்ரம்ப் யிடம் பேசவில்லை” என்று கூறுகிறார்.நாடாளுமன்றத்தில் நாங்கள்தான் போரை நிறுத்தினோம் நாங்கள் தான் பாகிஸ்தான் அதிபர் இடம் பேசினோம் என்று ஏன் கூறவில்லை.?. டிரம்ப் கூறியதற்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை. அமெரிக்கா அதிபருக்கும் இந்த போர் நிறுத்தத்திற்கும் சம்பந்தமில்லை என்று கூறுவதற்கு ஏன் ஆளுங்கட்சியினர் வாய் திறக்க மறுக்கிறார்கள். ராகுல் காந்தியை எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதில் கூற வேண்டும்.ட்ரம்ப் பேசி வருவது பொய் என்று கூறுவதற்கு ஏன் ஆளுங்கட்சியினர் மறுக்கிறார்கள்..? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் லாக்கப் மரணங்கள் தொடர்பாக பேசிய அவர், “உயிர்கள் எந்த விதத்திலும் சேதாரம் அடைந்து விடக் கூடாது. தமிழ்நாட்டு மக்களை பாதுகாப்பது என்ற இடத்தில் தான் காவல்துறை இருக்கிறது. நேர்மையாக அரசியல் செய்துவரும் முதல்வருக்கு எந்த ஒரு குந்தகமும் காவல்துறை விளைவித்து விடக்கூடாது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “ஆணவ படுகொலைகளுக்கு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். காங்கிரஸ் ஆட்சியில் இந்த சட்டம் கொண்டு வருவதற்கு தயாரானது இடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்தியா முழுவதும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பாஜக அரசு மறுக்கிறது. எனவே விரைவில் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்