"விஜயின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யாதது ஏன்?" - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததை அடுத்து ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனக்கூறி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, "விஜய் பிரசாரம் செய்த வாகனம் இடித்து, விபத்து நேரிட்டுள்ளதே, அந்த சம்பவத்தில், இடித்துவிட்டு ஓடியதாக விஜய் வாகனம் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை. அவ்வாறு செய்யாவிட்டால் மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும். தவெக தலைவர் விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை. அவர் மீது வழக்குப் பதிவு செய்ய என்ன தடை உள்ளது. இந்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. புகார் இல்லாவிட்டாலும் அவர் மீது வழக்கு செய்திருக்க வேண்டுமே" என்று தமிழக காவல் துறைக்கு நீதிபதி செந்தில் குமார் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
மேலும், "கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் எல்லாம் சம்பவம் நடந்ததும் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்கள். ஒருவர் கூட பொறுப்பேற்கவில்லை. தலைவர்கள் பலரும் தலைமறைவாகிவிட்டார்கள். விஜய் பிரசாரம் செய்த வாகனம் ஏன் இன்னமும் பறிமுதல் செய்யப்படவில்லை" என்றும் தமிழக அரசுக்கு நீதிபதி செந்தில் குமார் கேள்விகளை முன்வைத்தார்.