“ஆளுநர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசவில்லை?” - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காட்டம்!
சந்தேஷ்காலி விவகாரத்தை பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஏன் பேசவில்லை என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருப்பவர் ஆனந்த் போஸ். ஆளுநரும் மாநில அரசுடன் மோதிக் கொண்டு இருக்கிறார். தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி மேற்கு வங்கம் வர இருக்கிறார். அவர் இரவில் ராஜ்பவனில் தங்க இருக்கிறார்.
இந்நிலையில், பர்தாமானில் இன்று (மே. 3) நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி,
“பிரதமர் மோடி சந்தேஷ்காலி குறித்து பல விஷயங்களை பேசியுள்ளார். நான் அங்கு எந்த அசம்பாவித சம்பவமும் நடக்கவிடவில்லை. நிலத்தை சுற்றி பிரச்னை இருந்தது. நாங்கள் அதிகாரிகளை கிராமத்திற்கு அனுப்பி தீர்த்தோம். ஆனால் ராஜ்பவனில் பணிபுரியும் ஒரு இளம்பெண் வெளியே வந்து ஆளுநரின் துன்புறுத்தலுக்கு எதிராக பேசினார். நேற்று கூட ஆளுநர், ஏன் என் அமைச்சர் அவரை எதிர்த்து பேசினார் என்று கேட்டார்.
இந்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளுநர் ஆனந்த போஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். தேர்தல் ஆதாயத்திற்காக வீண்பழி செலுத்தும் நோக்கில் கட்டமைக்கப்பட்ட இதுபோன்ற கதைகளுக்கு.ப் பயப்பட மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.