“போர் நிறுத்த விவகாரத்தில் டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி ஏன் கூறவில்லை?” - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்வி!
கடந்த ஏப்ரம் மாதம், ஜம்மு – காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்னும் பெயரில் பாகிஸ்தான் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து இரு நடுகளுக்கும் இடையே எல்லை பதற்றங்கள் ஏற்பட்டு பின் அடங்கியது. மேலும், இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான தாக்குதலை மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் ஜூலை 21 முதல் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாள் தொடர்ந்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். இதனை தொடர்ந்து இன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் தொடா்பாக இரு அவைகளிலும் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விவாதத்தில் பேசிய மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி “போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி ஏன் கூறவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர்,
“இந்திய ராணுவம் செயல்பட முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். இந்திரா காந்தி காலத்தில் அந்த உரிமை வழங்கப்பட்டது; ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டாம் என்ற அரசியல் விருப்பத்தை பாகிஸ்தானிடம் தெரிவித்துவிட்டனர்; இதனால், பாகிஸ்தானின் ராணுவ தளங்களை நம் ராணுவ வீரர்கள் தாக்க முற்பட்டபோது, அவர்களின் கை கட்டப்பட்டது; விமானங்களை இழந்தோம்.போர் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என பாகிஸ்தானிடம் ஏன் சொன்னீர்கள்..?
பஹல்காம் துயரத்தால் பிரதமரின் கைகளில் படிந்த ரத்த கறையை போக்க மட்டுமே பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது; பிரதமர் தனது பிம்பத்தைப் பாதுகாக்க மட்டுமே இதை செய்தார்.உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்காமல், பயங்கரவாதத்திற்கு மட்டுமே கண்டனம் தெரிவித்தது; இதன் பொருள் பாகிஸ்தானுடன் இந்தியா சமன் செய்ய வேண்டும் என்பதே.உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்காமல், பயங்கரவாதத்திற்கு மட்டுமே கண்டனம் தெரிவித்தது; இதன் பொருள் இரண்டு நாடுகளையும் உலக நாடுகள் சமமாக பார்க்கின்றன என்பதையே காட்டுகிறது ; ஐக்கிய முற்போக்கு கூட்டணி காலத்தில், இது நடக்கவில்லை” என்று தெரிவித்தார்.