“எந்த ஆதாரமும் இல்லாமல் ஏன் என்னை சிறையில் அடைத்தீர்கள்?” - அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் எந்த ஆதாரமும் இல்லாமல் ஏன் என்னை சிறையில் அடைத்தீர்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கடந்த 10-ந்தேதி உயர்நீதிமன்றம் 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று அவர் மீண்டும் திகார் சிறையில் சரணடைந்தார். முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஆம் ஆத்மி கட்சி ஆலுவலகத்திற்கு சென்றார். தொடர்ந்து கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது :
“2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக உச்சநீதிமன்றம் எனக்கு 21 நாட்கள் ஜாமின் வழங்கியது. அதற்காக உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இன்று மீண்டும் திகார் சிறைக்கு செல்கிறேன். இந்த 21 நாட்களில் ஒரு நிமிடம் கூட நான் வீணடிக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சிக்காக மட்டுமல்ல மும்பை, ஹரியானா, உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு சென்று INDIA கூட்டணிக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்தேன்.
இதையும் படியுங்கள் : “வரலாற்றை திரித்துக் கூறுவதை நடிகர் பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என பிரதமர் நரேந்திர மோடியே தனது பிரச்சாரத்தில் ஒப்புக்கொண்டார். கெஜ்ரிவால் அனுபவம் வாய்ந்த திருடன் என்பதால் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் மீட்கப்படவில்லை என்று பிரதமர் மோடி ஒரு பேட்டியில் கூறி இருந்தார். நான் அனுபவமிக்க திருடன் என்று வைத்துக்கொள்வோம். உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. ஏன் எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் என்னை சிறையில் அடைத்தீர்கள்?
அதிகாரம் சர்வாதிகாரமாக மாறினால் சிறை பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பகத்சிங் கூறியிருப்பார். இந்த நாட்டை விடுவிக்க பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். இப்போது நான் சிறைக்கு செல்கிறேன். எனக்கு தெரியவில்லை எப்போது திரும்பி வருவேன் என்று. தேசத்திற்காக பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். நானும் தூக்கில் தொங்க தயாராக இருக்கிறேன்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.