தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், அதன் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் வழக்கை முடித்ததை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கின் மறுவிசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் விசாரித்தனர். அப்போது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இணைத்து மனுத்தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது நியாமானது தானா? இழப்பீடு வழங்க உத்தரவிட்டதுடன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் பணி முடிவடைந்து விடவில்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: “கேப்டன் மில்லர் தீயா…இருக்கு” – ஜி.வி.பிரகாஷ் குமார்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் தாக்கல் செய்த வழக்கு ஜனவரி 19-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.