வணங்கான் படத்தில் சூர்யா விலகியது ஏன்? - இயக்குநர் பாலா விளக்கம்!
வணங்கான் திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியது குறித்து இயக்குநர் பாலா விளக்கமளித்துள்ளார்.
பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வணங்கான். படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், படத்தின் புரமோஷனுக்கான இயக்குநர் பாலா நேர்காணல்களில் பங்கேற்றார். அப்படி, நேர்காணல் ஒன்றில், வணங்கான் திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியது ஏன்? எனவும், நடிகர் அருண் விஜய்காக சில மாற்றங்களைச் செய்தீர்களா? எனவும் கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்கு பதிலளித்த இயக்குநர் பாலா, “வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகவில்லை. கன்னியாகுமரியின் சுற்றுலா தளங்களில் நேரடியாக படப்பிடிப்பை நடத்தியதால் சூர்யாவை காண பல ரசிகர்கள் கூடிவிட்டனர். அதனால், படப்பிடிப்பை சரியாக நடத்த முடியவில்லை. பின், நானும் சூர்யாவும் ஆலோசித்துதான் அந்த முடிவை எடுத்தோம். எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது. நான் தனிப்பட்ட முறையில் ஏதாவது தவறு செய்தால்கூட அதைக் கேட்கும் உரிமையை சூர்யாவுக்கு அதிகமாகவே வழங்கியிருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.