நடிகர் சங்க கூட்டத்தில் கமல், ரஜினி கலந்து கொள்ளாதது ஏன்? #ActorNasar விளக்கம்!
“நடிகர்கள் ரஜினி, கமல் வருகிறார்களோ, இல்லையோ இங்கு நடப்பதை அவர்கள் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள்” என நடிகர் சங்க பொதுக்கூட்டத்தில் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது ஆண்டு பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூடத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசியதாவது;
“சிறப்பாக இந்த பொதுக்குழுவை நாங்கள் நடத்தினோம் என்பதை விட, நீங்கள் நடத்தினீர்கள் என்பதுதான் உண்மை. ஒவ்வொரு பொதுக்குழு நடத்தும் போதும் எனக்கு ஒரு பதற்றம் இருக்கும், இந்த இளைஞர்கள் எனக்கு ஊக்கம் அளிப்பார்கள். தம்பி கார்த்திக், பூச்சி முருகனுக்கு என் சிறப்பு நன்றிகள். சர்வாதிகார குணத்துடன் நல்ல நிர்வாகியாக பூச்சி முருகன் செயல்பட்டு வருகிறார்.
அவருக்கு சினிமா நடிகர்கள், நாடக கலைஞர்கள் என்ற பாகுபாடு இல்லை. எந்த நேரத்தில் நீங்கள் அழைத்தாலும் பதில் அளிப்பார். அவரால் பல உறுப்பினர்கள் பயன் அடைந்துள்ளார்கள். பூச்சி முருகன் சென்னையில் இருந்த ஒவ்வொரு நாளும் சங்கத்திற்கு நேரம் ஒதுக்கி உள்ளார். கருணாஸ் குரலுக்கு நன்றி. விஷால் நீ விதைத்தாய். நாங்கள் எல்லாரும் முளைத்து உள்ளோம்.
முத்துக்காளை நடிகர் என்பதற்கு அல்ல, நல்ல மனிதர் என்பதற்காக அவருக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. நடிகர் சங்க கூட்டத்தில் முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதுதான் பலரது குற்றச்சாட்டாக இருக்கிறது. இங்கு வராத நடிகர்கள் தான் நமக்காக கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். நடிகர்கள் ரஜினி, கமல் வருகிறார்களோ, இல்லையோ இங்கு நடப்பதை அவர்கள் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள்.
இன்று நடந்த நிகழ்வில் நடிகர் சங்கத்திற்காக நடிகர் யோகி பாபு நிதி அளித்தது முத்தாய்ப்பாக இருந்தது. அவரால் இன்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை. பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் எல்லா துறையிலும் உள்ளது. திரைப்படத் துறையில் உள்ளவர்கள் பற்றி பேசினால் பலருக்குத் தெரியும் என்று மிக கீழ்த்தரமாக பயன்படுத்துகிறார்கள். இனிமேல் நாங்கள் எங்கள் உரிமையை கேட்போம். நாடகம், சினிமா துறை அனைத்திலும் பெண்கள் பாதுகாப்பு முக்கியம்.
ஏற்கனவே விசாகா கமிட்டி அமைத்து சில பிரச்சனைகளை தீர்த்து வைத்தோம். ஏதேனும் தொல்லைகள் இருந்தால் தொடர்பு கொள்ளலாம். நிச்சயம் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தீர்வுகள் காணப்படும் என்று ரோகிணியும், நானும் உறுதி அளிக்கிறோம். நாங்கள் இம்முறை கட்டடத்தை முடிப்போம். வரும் சோதனைகளில் எங்களை வலிமைபடுத்துவதாக, உறுதிப்படுத்துவதாக நினைக்கிறோம். உங்கள் நம்பிக்கைக்கு நன்றி” என நடிகர் நாசர் பேசினார்.