அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகியது ஏன்? வெளியான பரபரப்பு தகவல்?
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த ஜோ பைடன், திடீரென்று தனது முடிவை மாற்றி போட்டியில் இருந்து விலகினார். இதற்கு என்ன காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பிரதான கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி சார்பில் களமிறங்கிய வேட்பாளர்களான, அதிபர் பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இதனிடையே, வயது மூப்பு காரணமாக பைடன் போட்டியிலிருந்து விலக வேண்டும் என, சொந்த கட்சியினரே வலியுறுத்த தொடங்கினர்.
இதையடுத்து நீண்ட விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளின் முடிவில், அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
ஜோ பைடன் விலக என்ன காரணம்?
ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கினார். 81 வயதாகும் நிலையில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடும் நிலையில், பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் பைடன் பேசுவதற்கு மிகவும் தடுமாறினார். அதேபோல் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்றும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை டிரம்ப் என்றும் தவறுதலாக கூறினார்.
இந்த சம்பவங்கள் ஜனநாயக கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அவர் அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார் என்றும் இதனால் அவர் போட்டியிட வேண்டாம் என்றும் ஜனநாயக கட்சியினர் விருப்பம் தெரிவித்தனர்.
இதனிடையே ஜனநாயக கட்சியின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூட ஜோ பைடன் விலக வேண்டும் என்று கூறி இருந்தார். மேலும் ஜோ பைடனின் குடும்பத்தினரும் அவர் போட்டியில் இருந்து விலக வேண்டும் என கூறியதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து தான் விலகுவதாக அதிபர் ஜோ பைடன் இன்று அறிவித்தார்.
இதனால், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக யார் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில்தான் கமலா ஹாரிசை ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக நியமிக்க ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
யார் இந்த கமலா ஹாரீஸ் ?
பைடன் கடந்த 2021ம் ஆண்டு அதிபராக பதவியேற்றதிலிருந்து, துணை அதிபரான கமலா ஹாரீஸ் துடிப்பாக செயல்பட்டு வருகிறார். ஜனநாயகக் கட்சியின் வலுவான தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார். 59 வயதான ஹாரிஸின் தந்தை ஜமைக்காவையும், தாய் தமிழ்நாட்டையும் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றிய முதல் கறுப்பினத்தவர் மற்றும் முதல் பெண்மணி என்பதோடு, தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் அமெரிக்க செனட்டர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் அமெரிக்காவின் முதல் பெண் மற்றும் கறுப்பினத்தைச் சேர்ந்த முதல் துணை அதிபரும் இவரே ஆவார். ஒரு வழக்கறிஞராக தனது வாழ்க்கையில், ஹாரிஸ் கடினமானவர் என்ற நற்பெயரைக் கொண்டிருக்கிறார்.