மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று 10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? - பிரதமர் மோடி பதில்!
மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று 10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காததற்கு நடுநிலையுடன் இருக்க வேண்டிய ஊடகங்கள் அவ்வாறு இல்லை என்று பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார்.
மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று 10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன் என அரசியல் கட்சிகள் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். அந்த பதிலில் நடுநிலையுடன் இருக்க வேண்டிய ஊடகங்கள் அவ்வாறு இல்லை. எனவேதான், பத்திரிகையாளர்கள் சந்திப்பு எதையும் நடத்தவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சி அளித்த பேட்டியில் கூறியதாவது :
"பத்திரிகையாளர்கள் தங்களுடைய பார்வையையும், கொள்கைகளையும்தான் முன்னிறுத்துகிறார்கள். நாடாளுமன்றத்துக்குத்தான் நான் பதிலளிக்க வேண்டியவன்.
இன்று, பத்திரிகையாளர்கள் அவரவர் விருப்பங்களுடன் அடையாளம் காணப்படுகிறார்கள். இப்போதெல்லாம் ஊடகங்கள் பக்கச்சார்புடன் செயல்படுகின்றன.
இப்போது மக்களுக்கு உங்களுடைய நம்பிக்கைகள் என்னவென்பது பற்றியும் தெரியும். முன்பெல்லாம் ஊடகம் முகமற்றவையாக இருந்தது.
இதையும் படியுங்கள் : “சவுக்கு சங்கருக்கு மே 28ம் தேதி வரை நீதிமன்றக் காவல்” – திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவு!
அரசியலில் செயல்பாடுகள் பற்றிக் கவலைப்படாமல் ஊடகங்களைக் கையாள்வதை மையப்படுத்திச் செயல்படுகிற புதிய கலாசாரம் உருவாகியிருக்கிறது. இந்தப் பாதையில் செல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. புதியதொரு பணிக் கலாசாரத்தை நான் கொண்டுவந்திருக்கிறேன். அதை ஒப்புக்கொள்வதா, இல்லையா என்பதை ஊடகங்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்"
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.