2 தொகுதிக்கு உடன்பட்டது ஏன்? - விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்
திமுகவிடம் 3 தொகுதிகள் ஒதுக்க வலியுறுத்திய நிலையில், 2 தொகுதிக்கு உடன்பட்டது ஏன் என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் நேரலை வீடியோவில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பேசியதாவது :
“தேசிய அளவில் மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கம் இல்லை. இருந்தபோதும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டிய தேவையை நாடு முழுவதும் பேசி வந்திருக்கிறோம். இந்தியா கூட்டணி உருவானதில் விசிக கணிசமான பங்களிப்பை செய்திருக்கிறது.
தேர்தலுக்கு முன் இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் அறிவிக்க முடியாத சூழல் இருந்தது. விசிக 2 தொகுதிகளில் போட்டியிடுவது என உடன்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். 3 தொகுதிகளை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என உறுதியாக இருந்தோம். எனினும் 2 தொகுதிக்கு உடன்பட்டிருப்பதை விசிகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். நம் வளர்ச்சியை பிடிக்காதவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் எச்சரிக்கையாக இருந்ததால், விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகிறோம்.
திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையே விரிசல் ஏற்படும். இதைப் பயன்படுத்தி திமுக கூட்டணியை உடைக்கலாம் என்ற உள்நோக்கம் உள்ளது. திமுகவுக்கு அழுத்தம் கொடுத்து 3 தொகுதிகளை பெறுவதற்கு விசிக ஏன் முழு மூச்சில் செயல்படவில்லை என்ற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அது நல்லெண்ணத்தில் வைக்கும் விமர்சனம் இல்லை.
3 தொகுதிகள் என்பது விசிக சுயமாக எடுத்த முடிவு. கூடுதல் தொகுதிகள் வேண்டும் எனும்போது அதற்கான யுத்திகளை வகுத்தோம், உரிய அழுத்தங்களை கொடுத்தோம். கட்சி நலனா, கூட்டணி, நாட்டு நலனா என்ற கேள்வியின்போது, நாட்டு நலன் முக்கியமானது. அதற்கு கூட்டணி நலன் முன் நிபந்தனையாக இருக்கிறது. எனவே, கட்சி நலனை அடுத்த நிலைக்கு தள்ளிவைக்க வேண்டிய கட்டாயம் எழுகிறது.
கூட்டணியில் யார் பலமாக இருக்கிறோம் என்ற ஒப்பீட்டில் விசிகவுக்கு உடன்பாடில்லை. விமர்சனத்துக்கு உணர்ச்சிவசப்படக்கூடாது. திமுக கூட்டணியை பலவீனப்படுத்த நினைப்போரே, நாம் ஏன் தனித்து போட்டியிடவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர்.
அதிமுக கூட்டணி அல்லது தனித்து போட்டி என்னும் முடிவு இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்துவதாக அமையும். வரலாற்று பழிக்கு ஆளாக நேரிடும். நாட்டு நலனை முன்வைத்து கையெழுத்திட்டேன். இதன்மூலம் கட்சியின் நன்மதிப்பு பல மடங்கு உயரும். அக்கறை உள்ளவர்களைபோல கருத்துகளை சொல்லி நம் உணர்ச்சியை தூண்டுவார்கள். அதற்கு ஒருபோதும் இரையாகக்கூடாது.
விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளிலாவது மாவட்ட நிர்வாகத்தை அறிவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். முன்னாள் மாவட்டச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் போன்றோரை மதிப்போடு தேவைப்படும் இடங்களில் பயன்படுத்த வேண்டும். நம் கட்சியினரை நாமே அரவணைக்காவிட்டால் யார் அரவணைப்பது. யாரையும் காயப்படுத்தக்கூடாது. வெல்லும் ஜனநாயக மாநாட்டு தீர்மானங்களை விளக்கி மாவட்ட அளவில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். கூட்டம் நடந்த இடங்கள் குறித்த தகவலை தலைமையகத்துக்கு தெரிவிக்க வேண்டும். மாநாட்டை நடத்தாத மாவட்டச் செயலாளர்கள் விசாரணைக்கு ஆளாக நேரிடும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.