“மதுவிலக்கு வேண்டி யார் குரல் கொடுத்தாலும், அது பாமகவின் குரலாகவே இருக்கும்” - #Ramadoss!
“மதுவிலக்கு வேண்டி யார் குரல் கொடுத்தாலும், அது பாமகவின் குரலாகவே இருக்கும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கர்நாடகாவை பின்பற்றி தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தி சமூகநீதியை காக்கவேண்டும். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கோவி. செழியன் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் பழங்குடியினரையும் அமைச்சரவையில் இடம்பெறச் செய்ய வேண்டும்.
காவிரி பாசனப்பகுதி மாவட்டங்களில் நிகழாண்டில் 13 லட்சம் ஏக்கரில், சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கு தேவையான தண்ணீர் மேட்டூர் அணையில் இல்லை. எனவே தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை கர்நாடக அரசிடம் கேட்டுப் பெற்று, முறை வைக்காமல் காவிரியிலும, கிளை ஆறுகளிலும் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புற உள்ளாட்சிகளை நகர்புற உள்ளாட்சிகளுடன் இணைத்தால், சொத்துவரி தண்ணீர் வரி அதிகரிக்கும்.
100 நாள் வேலைத்திட்டம் மூலம் வாழ்வாதாரம் பெறும் கிராம மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே கிராமப்புற உள்ளாட்சிகளை நகர்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். மேலும் சிப்காட் விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும். மதுவிலக்கு வேண்டி யார் குரல் கொடுத்தாலும், அது பாமகவின் குரலாகவே இருக்கும். போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும் விழுப்புரம் மாவட்டம், ஆனாங்கூர் ஊராட்சித் தலைவர் சங்கீதாவை இருக்கையில் அமர விடாமலும், பணிகளை செய்யவிடாமலும் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை பாமக வன்மையாக கண்டிக்கிறது”
இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.