இலங்கையின் புதிய பிரதமர் யார் ? - நாளை அறிவிக்கிறார் அதிபர் அனுர குமார திசாநாயக்க!
இலங்கையின் புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையை அதிபர் திசநாயகா நாளை நியமிப்பார் என்று தேசிய மக்கள் சக்தி கூட்டணி அறிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தேசிய மக்கள் சக்திக்கு அப்போதைய நாடாளுமன்றத்தில் வெறும் 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். பெரும்பான்மை இல்லாததால், நாடாளுமன்றத்தை கலைத்து திசாநாயக்க உத்தரவிட்டார். புதிய நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவ.14ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணியவில் நிறைவடைந்தது. இந்த தேர்தலில், அதிபர் அனுரா குமார திசநாயகே, சஜித் பிரேமதாசா, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் கட்சிகளும் தமிழ் கட்சிகளும் களத்தில் உள்ளன. வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
இதில் தொடக்கம் முதலே அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தற்போது பெரும்பான்மைக்கு தேவையான 123 இடங்களை அக்கூட்டணி கட்சிகள் கைப்பற்றியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி 31 இடங்களை பிடித்து 2வது இடத்தில் உள்ளது. தேசிய மக்கள் சக்தி கூட்டணி 61.7 சதவிகித வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 17.72 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன.
இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையை அதிபர் திசநாயகா நாளை நியமிப்பார் என்று தேசிய மக்கள் சக்தி கூட்டணி அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் வருகிற 21-ந்தேதி தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.