ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? #OPS பரபரப்பு பேட்டி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. திமுக மற்றும் நாதக கட்சிகள் வேட்பாளர் அறிவித்து போட்டியிடுவதாக அறிவித்தனர். 53 வாக்குப்பதிவு மையத்தில் உள்ள 237 வாக்குச்சாவடியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று முன்தினம் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரக்குமார் மற்றும் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தமாக 66 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் திமுக, நாதக உட்பட 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதிற்கு பதிலளித்த ஓபிஎஸ், "நாங்கள் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கவில்லை, ஓட்டளிப்போம். ஆனால், அது யாருக்கு என்பது ரகசியம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக கட்சி மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது. இந்த கட்சி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் யாரும் வெல்ல முடியாத இயக்கமாக வளர்ந்துள்ளது. அதிமுக கட்சி தற்போது பிரிந்து கிடக்கின்றது. எதிர்காலத்தில் கூட்டணி அமைத்தால் வெற்றி என்ற சூழல் உள்ளது" என்று தெரிவித்தார்.