ஒடிசா புதிய முதலமைச்சர் யார்..? - புவனேஸ்வரில் இன்று பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்!
ஒடிசா புதிய முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்ய புவனேஸ்வரில் இன்று பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜூன் 09 அன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
மக்களவைத் தோ்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தலும் நடந்தது. இதில் 25 ஆண்டுகளாக ஒடிசா மாநிலத்தை ஆண்டு வந்த நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதளம் கட்சியை, பாஜக வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது. மொத்தமுள்ள 147 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 78 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளாக முதல்வர் பதவியில் நவீன் பட்நாயக் நீடித்து வந்த நிலையில், இப்போது பாஜகவைச் சேர்ந்தவர் முதல்வராகவுள்ளார்.
ஒடிசாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான தர்மேந்திர பிரதான் முதல்வராக வாய்ப்புள்ளதாக முதலில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில் மீண்டும் கேபினட் அமைச்சராகிவிட்டார். இதனால், பிரஜாராஜ்நகர் தொகுதி எம்எல்ஏ சுரேஷ் பூஜாரி முதலமைச்சராக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.