தீபாவளி வின்னர் யார்? வெளியான 5 படங்களில் எந்த படம் சூப்பர்?
இந்த தீபாவளிக்கு மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடித்த டியூட், ஹரிஷ்கல்யாண், அதுல்யாரவி நடித்த டீசல் மற்றும் நட்டி நடித்த கம்பி கட்ன கதை மற்றும் பூகம்பம் ஆகிய 5 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ!
பைசன்
கபடி விளையாட்டு பின்னணியில்,1994ல் நடந்த ஜாதி பிரச்னைகள், சண்டைகள், சமூகநிலையை கலந்து மாரிசெல்வராஜ் விளையாடியிருக்கும் ஆட்டம் பைசன். தூத்துக்குடி மாவட்ட கிராமத்தில் வசிக்கும் துருவ் விக்ரமுக்கு கபடியில் சாதிக்க வேண்டும் என்பது கனவு. ஆனால், அவரை உள்ளூர் அணியில் கூட சேர்க்க மறுக்கிறார்கள். ஆனாலும், ஒரு நல்ல வாத்தியார் துணையுடன் அந்த அணியில் சேர்ந்து தனது திறமையை நிரூபிக்கிறார். கபடியில் ஸ்டார் ஆகிறார். தமிழக அணி, இந்திய அணியில் சேர்ந்து விளையாட நினைக்கிறார்.
அங்கே ஏகப்பட்ட பாலிடிக்ஸ். இதற்கிடையே தென்மாவட்டத்தில் அமீர் (பசுபதிபாண்டியன் கேரக்டர்), லால் (வெங்கடேச பண்ணையார் கேரக்டர்) ஆகியோர் இடையேயான பகை, ஜாதி மோதல்களால் துருவ் வாழ்க்கையும், எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. இந்த இரண்டு சிக்கல்களில் இருந்து அவர் மீண்டாரா? ஜப்பானில் நடக்கும் ஆசிய கபடி போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடி, அணியை ஜெயிக்க வைத்தாரா என்பது பைசன்/காளமாடன் கதை.
தேசியவிருது பெற்ற விக்ரமின் மகன் என்பதை நிரூபித்து இருக்கிறார் துருவ் விக்ரம். கபடி வீரராக அவர் ஆடுகிற ஆட்டம், சமூக நிலையில் ஏற்படும் அவமானங்களால் கொந்தளிக்கும் இடம், அநீதிக்கு எதிராக பொங்குகிற இடம், ஏமாற்றம், துரோத்தால் பாதிக்கப்பட்டு கலங்குகிற இடம், காதல், அப்பா பாசம் என பல இடங்களில் ஸ்கோர் செய்து, தன்னை சிறந்த நடிகராக நிலை நிறுத்தி இருக்கிறார். அவர் அப்பாவாக வருகிற பசுபதி, நம் நிஜ வாழ்க்கையில் பார்க்கும் கோபக்கார, பாசக்கார, மகன் மீது அக்கறை உள்ள அப்பாவாக வாழ்ந்து இருக்கிறார்.
அவருக்கு பல விருதுகள் நிச்சயம். துருவ் அக்காவாக வரும் ரஜிஷாவிஜயன் கெட்அப், அந்த ஸ்லாங், நடை, உடை நெல்லை பெண்ணாக மாற்றியிருக்கிறது. காதலியாக வரும் அனுபமாவும் வழக்கமான ஹீரோயினாக இல்லாமல் போல்டாக நடித்து இருக்கிறார். பாண்டியராஜாவாக வரும் அமீரின் சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படம். அவரின் கெத்து, சமூகம் குறித்த வசனங்கள், ஒரு திருமண வீட்டில் அவர் நடக்கும் விதம், அவரின் முடிவு சீன்கள் பரபரப்பு. கந்தசாமியாக வாழ்ந்திருக்கும் அண்ணாச்சி லாலும், அதிகம் அலட்டாமல் நடிப்பில் கைதட்டல் வாங்குகிறார்.
அவரின் பார்வை, சில குணம் பெரிய மதிப்பை ஏற்படுத்துகிறது. இவர்களை தவிர, வாத்தியாராக நடித்த அருவி மதனுக்கு பாராட்டுகள் நிச்சயம். இந்தி கபடி அதிகாரி, கபடி கேப்டன், கபடி தேர்வு குழுவை சேர்ந்த அழகம்பெருமாள், ஊர் மக்கள், பெரிசுகள் எல்லாரும் இயல்பாக, கதையோடு ஒன்றி நடித்து இருக்கிறார்கள். அந்த நிலப்பரப்பை, 1993, 94 வாழ்க்கையை அப்படியே, அழகாக பதிவு செய்து இருக்கிறார் எழில் அரசு.
நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை, பாடல்கள் படத்தை இன்னும் உயிர்ப்பாக்குகிறது. படத்தில் ஆங்காங்கே வரும் சாட்டையடி வசனங்கள், கபடி காட்சிகள், வன்முறை காட்சிகள், கிளைமாக்ஸ் விறுவிறுப்பாக இருக்கிறது. முதற்பாதியில் கதை கொஞ்சம் வேகமில்லாமல் இருக்கிறது. பின்னர் சூடுபிடிக்கிறது. படத்தின் நீளமும் மைனஸ், காமெடி, கலர்புல் காதல் காட்சிகள் இல்லை. ஆனாலும், ஜாதியை பற்றி பேசும் படமாக இருந்தாலும், ஜாதி படமாக இல்லாமல், எந்த தரப்பை தவறாக காண்பிக்காமல் சொன்னது பிளஸ்.
குறிப்பாக, ஒரு இளைஞன் முன்னேறணும். அவன் கபடி ஜெயிக்கணும் என்று அமீர், லால் என்ற இரண்டு ஜாதி தலைவர்களும் பாசிட்டிவ் சிந்தனையுடன் இருப்பதும், அவர்கள் செயல்பாடுகளும் படத்தின் உயிரோட்டம். இந்த விஷயத்தில் மாரிசெல்வராஜ் கண்ணோட்டம், இளைஞர்கள் மீதான அவரின் பாசப்பார்வை பாராட்டப்படக்கூடியது. ஒரு கிராமத்து இளைஞன் எப்படி போராடி ஜெயிக்கிறான். கபடியில் எப்படி பெயர் எடுத்தான் என்பதை அர்ஜூனா விருது பெற்ற மணத்தி கணேசன் வாழ்க்கையை தழுவி, கற்பனை கலந்து எடுக்கப்பட்ட படம் பைசன். இந்த ஆண்டின் தரமான படங்களில் ஒன்றாகவும், துருவ் விக்ரமுக்கு வெற்றி படமாக அமைகிறது.
டீசல்
படத்தின் தலைப்புக்கு ஏற்ப துறைமுகத்தில் இருந்து பைப் லைன் மூலமாக வரும் ஆயிலை சுற்றி நடக்கும் அரசியல், சண்டை, பெருமுதலாளிகளின் பணத்தாசை, மீனவ மக்களின் பிரச்னைகள், அதிகார, பணபலத்தை விவரிக்கும் கதை இது. பைப் லைனில் வரும் ஆயிலை திருடி, அதை மும்பை கம்பெனிக்கு விற்று, அந்த பணத்தை கொண்டு மீனவ மக்களுக்கு நல்லது செய்கிறார் சாய்குமார். அவருக்கு உதவியாக இருக்கிறார் ஹரீஷ் கல்யாண். ஆனால் பணத்துக்கு ஆசைப்பட்டு வில்லன் விவேக் பிரசன்னாவும், போலீஸ் அதிகாரி வினயும் தனி ரூட் போட்டு இன்னொரு பக்கம் ஆயிலை அதிகமாக திருடுகிறார்கள்.
அரசுக்கு தெரியவர பிரச்னை ஏற்படுகிறது. அப்போது மும்பை பெருமுதலாளி மீனவர்களுக்கு எதிராக ஒரு திட்டம் போடுகிறார். அது என்ன? ஹீரோ என்ன செய்கிறார் என்ற ரீதியில் டீசல் நகர்கிறது. சிம்பு பாடலுக்கு குத்தாட்டம். ஆக் சன் காட்சிகளில் அட்டகாசம் என ஹரீஷ் நடிப்பு ஓகே. குறிப்பாக, மக்களை திரட்டி அவர் நடத்தும் போராட்டசீ்ன்கள், புத்திசாலிதனமாக தனது திட்டத்தை செயல்படுத்த நடத்தும் டிராமா சூப்பர். ஹீரோயின் அதுல்யா பெரியளவில் கவரவில்லை. போலீஸ் ஆபீசரான வினய் மிரட்டி இருக்கிறார்.
வில்லன்களாக வரும் விவேக் பிரசன்னா, சச்சின் கெட்அப், நடிப்பு ஓகே. சாய்குமார் சில சீன்களில் வருகிறார். கருணாசும் அப்படியே. காதல் காட்சிகள் சுமார். பாடல்கள் ஓகே. கவுன்சிலராக வரும் சுப்ரமணியசிவா சவுண்டும், நடவடிக்கையும் சிறப்பு. கர்ப்பிணியாக நடித்து சரண்யா ரவிச்சந்திரன் சம்பந்தப்பட்ட சீன்கள் டச்சிங். மக்கள் பிரச்னைக்கான படம் என்பதால் அதிக கமர்சியல் சீன்கள் இல்லை.
டியூட்
அமைச்சர் சரத்குமார் மகள் மதுமிதா, தனது மாமா மகன் பிரதீப் ரங்கநாதனை காதலிப்பதாக சொல்கிறார். அவரோ எனக்கு அந்த பீலீங் வரவில்லை என்று காதலை மறுக்கிறார். ஆனால் சிறிது காலத்தில் அந்த பீலீங் வர, மதுமிதாவை காதலிப்பதாக சொல்லி, மாமா சரத்குமாரிடம் பேசி திருமணத்துக்கு தயாராகிறார். ஆனால், மமிதாவோ இப்ப இன்னொருவரை லவ் பண்ணுறேன். நீதான் சேர்த்து வைக்கணும்னு என்று வேண்டுகோள் விடுகிறார். இதை அறிந்த சரத்குமார் நீ அவனை திருமணம் செய்தால் அவ்வளவுதான் என மிரட்டுகிறார்.
இதற்கிடையே மதுமிதா லவ்வரும் திருமணத்துக்கு வர, என்ன நடக்கிறது. யார், யாரை திருமணம் செய்தார்கள் என்பது டியூட் கதை ஒரு பெண், இரண்டு காதலர்கள், ஒரு பெண், காதலன், கணவன் என பல படங்களில் பார்த்த கதைதான். அதை இன்றைய தலைமுறைக்கு பிடிக்கும்படி, அவர் கை தட்டி ரசிக்கும் படி யூத்புல்லாக, கலர்புல்லாக எடுத்து இருக்கிறார் இயக்குனர் கீர்த்தீஸ்வரன்.
துறுதுறு கேரக்டரில், காமெடி கலந்த தனித்துவ பாடி லாங்குவேஜில் அருமையாக நடித்து இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அவரின் கேரக்டர், சேட்டைகள் இளம் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும். மமிதா பைஜூவும் காதலி, மனைவி என இரண்டு இடங்களில் நடிப்பில் கலக்கி இருக்கிறார். அவரின் முற்போக்கு பேச்சு, டான்ஸ் ஸ்பெஷல்.
அமைச்சராக வரும் சரத்குமார். தனது தனித்துவ நடிப்பால் மனதில் நிற்கிறார். பாசம், காமெடி, வில்லத்தனம், செண்டிமெண்ட் என அனைத்திலும் புகுந்து விளையாடி கைதட்டல் வாங்குகிறார். இவர்களை தவிர, ஹீரோயின் இன்னொரு காதலனாக வரும் ஹிருது ஹாரூன் அப்பாவிதனமான நடிப்பிலும், பரிதாபங்கள் டிராவிட் சில இடங்களிலும் கவர்கிறார்.
சாய் அபயங்கர் இசை, அலையே உள்ளிட்ட பாடல்கள் தாளம் போட வைக்கிறது. நிகேத் பொம்மி ஒளிப்பதிவு படத்தை அழகாக்கி உள்ளது. முதற்பாதி கலகலப்பாக, கலர்புல்லாக, காமெடியாக நகரும் கதை அடுத்து கொஞ்சம் சீரியஸ் ஆகிறது. கிளைமாக்ஸ் புதுமை. புது சீன்களை காமெடி கலந்த நடிப்பால் கலகலப்பாக கொண்டு சென்றது ரசிக்க வைக்கிறது. சரத்குமார் கேரக்டர் டிவிஸ்ட், ஹீரோயின் , ஹீரோ டயலாக், காதலை புது மாதிரி சொன்னது ஈர்ப்பு
என்னடா இப்படியெல்லாம் காதல் மாறுமா? கணவன், மனைவி உறவு இப்படி இருக்குமா என சிலருக்கு சந்தேகம் வரலாம். இது கொஞ்சம் தப்பான கான்செப்ட் ஆச்சே என சிலர் டவுட் படலாம். ஆனாலும் தீபாவளி ரேசில் கமர்சியலாக முன்னணியில் இருப்பது டியூட் தான்.
கம்பி கட்ன கதை
ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் நட்டி, சிங்கம்புலி, ஸ்ரீரஞ்சனி நடிப்பில் பக்கா காமெடி படமாக உருவாகி உள்ளது கம்பி கட்ன கதை. மக்களை தனது பேச்சால் ஏமாற்றி, மோசடி செய்யும் நட்டியை வைத்து ஒரு வைரத்தை திருட வைக்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி. அந்த வைரத்தை திருட போலி சாமியார் வேஷம் போட்டு ஒரு கோயிலுக்கு செல்கிறார் நட்டி.
அங்கே என்ன நடக்கிறது என்பது கதை. பேச்சால், நடிப்பால் படத்தை தூக்கி நிறுத்துகிறார் நட்டி. அவருக்கு உதவியாக சிங்கம்புலியும் தன் பாணியில் கலகலப்பு ஊட்டி இருக்கிறார். இரண்டாவது நாயகனாக நடித்துள்ள முகேஷ் ரவியும் மனதில் நிற்கிறார். நட்டி கேரக்டர் நித்யானந்தாவை நினைவுப்படுத்துகிறது. கைலாசா மாதிரியான தீவு காமெடியும், சாமியார் பேச்சும் கலகலப்பு. நா.முருகானந்தம் வசனங்கள் படத்துக்கு பெரிய பலம்.
பூகம்பம்
அண்ணன், தம்பி மோதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லும் கதை பூகம்பம். அரசியல்வாதி அண்ணன், கல்லூரி மாணவன் தம்பியாக நடித்து படத்தை இயக்கி தயாரித்து இருப்பவர் இஷாக் உசைனி. அண்ணன், தம்பிக்குள் மோதல் ஏன்? அவர்கள் பிரிந்தது ஏன்? ஜெயித்தது யார் என்பது கரு. பிரியா, ஜூலி ஆகிய இரண்டுபேர் ஹீரோயின். குடும்ப பாசம், பழிவாங்கல் என பல விஷயங்கள் படத்தில் இருக்கிறது
- மீனாட்சி சுந்தரம், சிறப்பு செய்தியாளர்