நடப்பு ஆண்டின் சிறந்த வீரர் யார் ? - ஐசிசி விருதுக்கு 4 முக்கிய வீரர்கள் பரிந்துரை!
இந்த ஆண்டின் சிறந்த கிரிகெட் வீரருக்கான ஐசிசி விருதுக்கு இந்திய வீரர் ஜஸ்பிரீத் பும்ரா உட்பட 4 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின், மூன்றாவது இன்னிங்ஸ் துவக்கத்தில், இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக இருந்தது. இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 100+ ரன்கள் முன்னிலை வகித்ததாலும், இந்திய அணிக்கு, 340 ரன்களை, ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயம் செய்தது. இறுதியில், இந்திய அணி 155/10 ரன்களை மட்டும் சேர்த்தது. இதன் மூலம் 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.
4வது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 இன்னிங்ஸிலும் சேர்த்து 9விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இந்த நிலையில் 2024 ஆண்டின் ஐசிசி விருதுக்கு இந்திய அணியை சேர்ந்த வீரர் பும்ரா பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த விருதுக்கு இந்திய வேக பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஜோ ரூட், ஹாரி புரூக் மற்றும் இலங்கையின் குஷால் மெண்டிஸ் ஆகியோர் பரிந்துரைக்கபட்டுள்ளனர்.
பும்ரா இந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி , 71 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார். ஜோ ரூட் 17 டெஸ்டில் விளையாடி 55.57 சராசரியுடன் 1,556 ரன்களை குவித்துள்ளார். இதில் 6 சதங்கள் மற்றும் 5 அரை சதங்கள் அடங்கும். ஹாரி புரூக் 12 போட்டிகளில் விளையாடி 4 சதங்கள், 3 அரை சதங்கள், 55 சராசரியுடன் 1,100 ரன்கள் குவித்துள்ளார். குஷால் மெண்டிஸ் 9 போட்டிகளில் விளையாடி 74.92 சராசரியுடன் 1,049 ரன்கள் சேர்த்துள்ளார்.