தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் யார் யார் பங்கேற்பு?
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வருகிற 22-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 7 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் அந்தந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று முதலமைச்சர்கள், மாநில கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்து கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்தனர்.
இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
"7 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்து கடிதம் எழுதி இருந்தார். தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவர் கே.டி. ராமராவ் பங்கேற்கின்றனர். அதேபோல் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனும் பங்கேற்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பை ஏற்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூட்டத்தில் பங்கேற்கிறார். மேற்குவங்க மாநிலத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ், ஒடிசாவில் இருந்து பிஜு ஜனதா தளம் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்"
இவ்வாறு திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் தெரிவித்தார்.