நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் என்ன? - எடப்பாடி பழனிசாமி பேட்டி!
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. அப்போது அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு சபாநாயகர் அப்பாவு, விவாதத்திற்கு எடுக்க எடுக்க முடியாது என தெரிவித்தார். சபாநாயகரின் பதிலை ஏற்க மறுத்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இந்த நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
"அதிமுக சார்பில் சட்டப்பேரவையில் அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். அதற்கு சபாநாயகர் அனுமதி தரமறுத்ததை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. கடந்த காலங்களில் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் பலமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்று கூறினோம். கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை.
டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்று தான் அமித்ஷா கூறினார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷாவும் கூறவில்லை. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் என்ன? பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. தேர்தல் நெருங்குவதால் மாநில சுயாட்சி குறித்து பேசி திமுக அரசு திசை திருப்புகிறது" என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக இணைந்து போட்டியிடும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில தினங்கள் முன் சென்னை வந்த அமித்ஷா, பாஜக - அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.