தாஜ்மஹாலை கட்டியது யார்? - ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
தாஜ்மஹாலை கட்டியது யார் என்பதை ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை கண்டறிவதற்கான வழிகாட்டுதல் ஏற்படுத்த கோரி இந்து சேனா அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இந்த வழக்கில் இந்து சேனா அமைப்பு தாஜ்மஹால் முகலாய பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்டது அல்ல, ராஜா மான் சிங்கால் கட்டப்பட்டது என தெரிவித்திருந்தது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
இந்து சேனா தலைவர் சுர்ஜித் சிங் யாதவ் தாக்கல் செய்த மனுவில், தாஜ்மஹால் முதலில் ராஜா மான் சிங்கின் அரண்மனை என்றும், பின்னர் ஷாஜஹானால் புதுப்பிக்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார். எனவே தாஜ்மஹால் தொடர்பான தவறான வரலாற்றை புத்தகங்களில் இருந்து அகற்ற தொல்லியல்துறை, மத்திய அரசு, இந்திய தேசிய ஆவணக் காப்பகம் மற்றும் உத்தரப் பிரதேச அரசு ஆகியவற்றுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என அந்த மனுவில் கோரினார்.
மேலும் இந்த மனுவில் தாஜ்மஹாலின் வயது குறித்தும், ராஜா மான் சிங்கின் அரண்மனையின் கட்டப்பட்ட ஆண்டு மற்றும் அது தொடர்பான விசாரணை நடத்த ஏஎஸ்ஐக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்து சேனா அமைப்பு இது தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் மத்திய தொல்லியல் துறைக்கு முன்பு இது தொடர்பான கோரிக்கை மனுவை அளிக்குமாறு பரிந்துரை செய்திருந்தது. இதனை மேற்கோள்காட்டி இந்த வழக்கு வாதாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய தொல்லியல் துறைக்கு தாஜ்மஹால் தொடர்பாக ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது.