யார், யாருக்கு வெள்ள நிவாரணம் ரூ.6,000? அரசாணை வெளியீடு!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசின் அரசாணை வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் டிசம்பர் 3, 4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மழை, வெள்ள பாதிப்பினால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்களை நடத்தி, பொது மக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும்.
சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களுக்கும் மிக்ஜாம் புயலால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் உள்ளிட்ட வட்டங்கள் முழுமையாகவும், மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்களுக்கும் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்களுக்கு மட்டும் புயலால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.