இந்த வாரம் ரிலீஸான 7 படங்களில் எது டாப்? Week endல் எந்த படம் பார்க்கலாம்?
இந்த வாரம் (ஜூலை 4) தமிழில் பறந்துபோ, 3bhk, பீனிக்ஸ், அகேனம், குயிலி, அனுக்கிரகன் மற்றும் ஜூராசிக் வேர்ல்ட் ரீபெர்த் (தமிழ் டப்பிங்) என மொத்தம் 7 படங்கள் ரிலீஸ் ஆகிஉள்ளன. இந்த வார இறுதியில் எந்த படம் பார்க்கலாம். இதோ மினி விமர்சனம்
பறந்து போ
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரபல மலையாள நடிகை கிரேஸ்ஆண்டனி, மாஸ்டர் மிதுல்ராயன், அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பறந்து போ. சேட்டைக்கார, வால் பையனான மிதுல்ராயன் குறும்புதனங்களை பெற்றோர்களான சிவா, கிரேஸ் ஆண்டனி எப்படி சமாளிக்கிறார்கள். அவனின் கேள்விகள், செயல்பாடுகளில் இருந்து என்ன கற்றுக்கொள்கிறார்கள், பார்வையாளர்களான நாம் என்ன கற்கிறோம் என்பதுதான் கதை. பக்கா கலகல காமெடி படம். படம் முழுக்க சிரித்துக்கொண்டே இருக்கலாம். மிர்ச்சி சிவா நடிப்பும், கிரேஸ் ஆண்டனி நடிப்பும் படத்துக்கு பலம்.
அதிலும் மகனிடம் சிக்கிக்கொண்டு சிவா படுகிற பாடு, மரம் ஏறி அடிக்கிற காமெடி அவ்வளவு சுவாரஸ்யம். மகனாக நடித்த மிதுல்ராயனுக்கு ஏகப்பட்ட விருதுகள் நிச்சயம். சிவாவின் பள்ளி தோழியாக அஞ்சலியும், அவர் கணவராக அஜூவர்கீசும் வருகிறார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் நம் மனதில் இருந்து மறைய பல ஆண்டுகள் ஆகும். அதில் பேசப்படும் வசனங்கள் அவ்வளவு இயல்பு. படத்தில் ஒரு ரோடு டிரிப் வருகிறது. அது முக்கியமான விஷயம். குழந்தைகளின் மனநிலை, பணத்துக்காக ஓடும் நடுத்தர வர்க்க பெற்றோர்களின் சூழ்நிலை, குடும்பத்துக்கு நேரம் செலவழிக்க வேண்டும், அன்றைய தினத்தை, அன்றாட காட்சிகளை ரசிக்க வேண்டும் என பல விஷயங்களை அந்த சீன்கள் சொல்லாமல் சொல்கின்றன.
அப்பா, அம்மா, மகன் ஓடும் கடைசி அரைமணி காட்சிகள் அவ்வளவு அழகாக, ரசிக்கும்படி இருக்கிறது. சந்தோஷ்தயாநிதி இசையும், ஏகாம்பரம் ஒளிப்பதிவும், மதன்கார்க்கி வரிகளும் படத்துக்கு பிளஸ். ராம் படங்களில் இது வித்தியாசமானது, சிரித்துக்கொண்டே வெளியே வரலாம். இந்த வாரம் வந்த படங்களில் டாப் பறந்துபோதான்.
3BHK
ஒரு தனியார் நிறுவனத்தில் ‘கணக்கு’ பார்க்கிறார் சரத்குமார். அவர் மனைவி தேவயானி. சித்தார்த், மீதாரகுநாத் அவர்களின் குழந்தைகள். அடிக்கடி வாடகை வீடு மாறுவதால், வீட்டு ஓனர் தொல்லைகள் தருவதால் சொந்தமாக ஒரு 3 bhk (3 பெட்ரூம் உள்ள வீடு) வாங்க ஆசைப்படுகிறார்கள். அது நடந்ததா? என்பது படத்தின் கரு. ஒரு நடுத்தர குடும்ப தலைவனாக, பொருளாதார பிரச்னையில் சிக்கி தவிப்பவாரா, அழுத்தமாக நடித்து இருக்கிறார் சரத்குமார்.
பள்ளி மாணவன், கல்லுாரி மாணவன், ஐடியில் வேலை பார்ப்பவர் என 3 கெட் அப்பில் மிரட்டியிருக்கிறார் சித்தார். அவர் தங்கையாக வரும் மீதா, நம் குடும்பங்களில் பார்க்கும் அன்பு தங்கை. சித்தார்த் காதலியாக வரும் கன்னட நடிகை சைத்ராவும் தன் பங்கிற்கு கவர்கிறார். வாடகை வீடுகளில் இருப்பவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், சொந்தமாக வீடு வாங்குபவர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்கள், நடுத்தர குடும்பத்தினரின் கவலைகள் பல விஷயங்களை உன்னிப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகணேஷ்.
இவர் எட்டு தோட்டாக்கள் பட இயக்குநர். முதற்பாதி வேகமாக நகர்கிறது. பிற்பாதி ஐடி வேலை, தங்கை பிரச்னை என கொஞ்சம் இழுக்கிறது. ஆனாலும் நம்முடைய வாடகை வீட்டு நினைவுகளை, சொந்த வீடு வாங்கிய அனுபவங்களை, குடும்பத்தில் சந்தித்த பொருளாதார பிரச்னைகள், அன்பை நினைவுப்படுத்தி பீல் பண்ண வைக்கிறது திரைக்கதை
பீனிக்ஸ்/ வீழான்
விஜய்சேதுபதி மகன் சூர்யாசேதுபதி ஹீரோவாக அறிமுகம் ஆகும் படம் பீனிக்ஸ். பைட்மாஸ்டர் அனல் அரசு இந்த படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். தனது அண்ணனை கொன்ற எம்எல்ஏவை கொல்கிறார் ஹீரோ. அதற்கு பழி வாங்க நினைக்கிறது எம்எல்ஏ குடும்பம். சூர்யாசேதுபதியை சிறார் ஜெயிலில் வைத்து கொலை செய்ய நினைக்கிறது. ஏகப்பட்ட ரவுடிகளை, கூலி படைகளை அனுப்புகிறது. அங்கே என்ன நடக்கிறது என்பதை தனது அதிரடி பாணியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
முதற்பாதியில் அதிகம் பேசாமல், சண்டைக்காட்சிகள் மூலம் பேசியிருக்கிறார் விஜய்சேதுபதி மகன். இடைவேளைக்குபின் குடும்பம், சென்டிமென்ட், காதல், பழிவாங்கல் என கதையும் மாறுகிறது. படத்தின் பெரிய பலம் பைட் சீன்கள்தான். ஜெயிலுக்குள் நடக்கும் சண்டை, கிளைமாக்சில் நடிக்கும் சண்டைகளில் பொறி பறக்கிறது. ஆக் ஷன் ஹீரோவாக ஜெயித்து இருக்கிறார் சூர்யா. மற்ற கமர்ஷியல் விஷயங்கள் படத்தில் மிஸ்சிங். வில்லியாக வரலட்சுமி வருகிறார். ஹீரோ அண்ணனாக காக்கா முட்டை விக்னேஷ் நடித்துள்ளார். சண்டை பிரியர்களுக்கு படம் பிடிக்கும்.
குயிலி
பி. முருகசாமி இயக்கத்தில் லிசிஆண்டனி, தஷ்மிகா, ரவிசா, புதுப்பேட்டை சுரேஷ், வி.வி.அருண்குமார் உட்பட பலர் நடித்து இருக்கும் படம் 'குயிலி'. கோவை அருகே இருக்கும் கிராமத்தில் கள்ளசாராயத்தால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதை தட்டிக்கேட்கும் ஹீரோவே ஒரு கட்டத்தில் அதற்கு அடிமை ஆகி உயிரை விடுகிறார். அப்பா குடி பழக்கத்தால், குடிக்காத ஹீரோவை காதலித்து திருமணம் செய்த ஹீரோயின் தொடர்ச்சியாக மதுவுக்கு எதிராக போராடி வருகிறார். கஷ்டப்பட்டு தன் மகனை கலெக்டர் ஆக்குகிறார்.
ஆனால், மகனோ பலர் சாவுக்கு காரணமான மதுபான ஆலை அதிபர் மகளை திருமணம் செய்ய நினைக்க, அந்த பாசக்கார தாய் என்ன செய்கிறார். மகன் திருந்தினானா என்பது கிளைமாக்ஸ். சமீபகால தமிழ்சினிமாவில் குடிக்கு எதிராக இப்படியொரு எந்த கதையும் வந்தது இல்லை. குடிகாரர்களின் மனநிலை அவர்கள் உருவாகும் விதம், மதுபான பிஸினஸ், அரசியல், போராட்டங்கள் என பல விஷயங்களை கதை அழுத்தமாக சொல்கிறது.
சின்ன வயது ஹீரோயினாக தஷ்மிகாவும், கலெக்டரின் அம்மாவாக லிசிஆண்டனியும் மிக சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். ஹீரோவாக ரவிசாவும், கலெக்டர் மகனாக வி.வி. அருண்குமாரும் மனதில் நிற்கிறார்கள். குடி வேண்டாம் என ஹீரோயின் நடத்தும் போராட்டங்கள், மகனுக்கு எதிராக எடுக்கும் நிலைப்பாடு நச். ஒரு அழகான கிராமத்து கதையில் நல்ல கருத்தை சொல்லி, தானே காமெடியனாக நடித்தும் அசத்தியிருக்கிறார் இயக்குநர் பி.முருகசாமி
அனுக்கிரகன்
டைம் டிராவல் பின்னணியில் பல படங்கள் வந்திருந்தாலும் அனுக்கிரகன் கொஞ்சம் வித்தியாசமானது. தனது தந்தையின் பள்ளி பருவம், இளமை காலம், அவரின் கஷ்டங்களை அறிய விரும்புகிறான் மகன். அதற்காக, கடவுள் அருளால் டைம் டிராவல் என்ற முறையில் பல ஆண்டுகள் பின்னோக்கி செல்கிறான். சின்னவயது அப்பாவுக்காக மகன் என்ன செய்தான் எப்படி மனம் மாறினான் என்பது அனுக்கிரகன் கதை. சுந்தர் கிருஷ் இயக்கத்தில் விஜய் கிருஷ்ணா, முரளி ராதாகிருஷ்ணன், ஸ்ருதி ராமகிருஷ்ணன், தீபா உமாபதி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.
கடவுள், கடந்த காலம், டைம் டிராவல் என நகர்வால் இது சயின்ஸ் பிக்சனா? பக்திபடமா? பேண்டசி படமா? என்ற சந்தேகம் வருகிறது. ஆனாலும், அப்பா மீது மகன் கொண்ட பாசமே பிரதான விஷயம் என்பதால், பலருக்கு தங்கள் அப்பா நினைவு வரும். வழக்கமான கதைகளுக்கு மத்தியில் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து இருக்கிறார் இயக்குநர். இதில் மகனாக வரும் ராகவன் நடிப்பு மனதில் நிற்கிறது. ரோஹன் இசை ஓகே.
அகேனம்
அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில் உருவாகியுள்ள 'அகேனம்' படத்தில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சீதா, ஷிவ் பிங்க், ஆதித்யா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கால் டாக்சி டிரைவராக வருகிறார் கீர்த்திபாண்டியன். 3 முக்கிய கேரக்டர் பின்னணியில் திரில்லர் கதையாக உருவாகி உள்ளது. ஒவ்வொருவரும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? யாரால் பாதிக்கப்படுகிறார்கள்? எப்படி ஒரு புள்ளியில் இணைகிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்ற ரீதியில் கதை நகர்கிறது.
ஜூராசிக் வேர்ல்ட் ரீபெர்த்
ஜூராசிக் பார்க் கதை பின்னணியில் வந்திருக்கும் 7வது படம் இது. ஈக்வேடார் அருகே உள்ள, ஆள் நடமாட்டம் இல்லாத தீவில் பறக்கிற, நிலத்தில் வாழ்கிற, நீரில் இருக்கிற 3வகை டைனோசர்ஸ் இருக்கின்றன. அதன் ரத்த மாதிரியை சேகரித்து ஆராய்ச்சி செய்தால் இதய நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கலாம், கோடிகளில் சம்பாதிக்கலாம் என ஒரு நிறுவனம் நினைக்கிறது. ஹீரோயின் தலைமையில் ஒரு டீம் அந்த ரத்த மாதிரிகளை சேகரிக்க கிளம்புகிறது. அயன்மேன், கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ், பிளாக்விடோவில் நடித்த ஸ்கார்லெட் ஜொஹான்ஸ்சன்தான் அந்த ஹீரோயின்.
ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளது. இயக்குநர் கேரத் எட்வர்ட்ஸ் பக்கா கமர்ஷியலாக, பிரமாண்டமாக இயக்கி இருக்கிறார். காடு, மலை, கடல், பிரமாண்ட டைனோசர்ஸ், அவை நடத்தும் வேட்டை, சென்டிமென்ட், அருமையான கிராபிக்ஸ் விருந்து என அனைத்தும் படத்தில் இருக்கிறது. ரத்த மாதிரிகளுக்காக டைனோசர்ஸ்களை இந்த டீம் துரத்த, ஒரு கடத்தில் அந்த டைனோசர்ஸ் இவர்களை துரத்த, அடடா, சூப்பர் எக்ஸ்பிரியன்ஸ். குழந்தைகள், குடும்பத்துடன் 3டியில் பார்த்தால் மறக்க முடியாத நாளாகும். தமிழ் டப்பிங்கிலும் ஜூராசிக் வேர்ல்ட் ரீபெர்த் வந்துள்ளது.
- மீனாட்சிசுந்தரம், சிறப்பு செய்தியாளர்.