நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்!
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் மாவட்டங்களில் நாளை கனமழை முதல் மிககனமழை பொழிய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. ஐந்து இடங்களில் அதி கனமழையும் 48 இடங்களில் மிக கனமழையும் 21 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 30 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கடந்த ஒன்றாம் தேதி முதல் இன்று வரையிலான கால கட்டத்தில், பதிவான மழையின் அளவு 138 மி.மீ. இந்த கால கட்டத்தில் இயல்பான அளவு 71 செ.மீ ஆகும்.
சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக வரும் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோரங்களில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது.
நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது புதுச்சேரி நெல்லூரை ஒட்டி சென்னைக்கு அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. சென்னையில் அனைத்து பகுதிகளிலும் 20 செ.மீ. மழை என்பது கிடையாது, ஓரு சில இடங்களில் மழை பொழிவு அதிகமாக இருக்கும், கடந்த முறை ஏற்பட்ட பாதிப்பிற்குகாக சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.
கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (17ஆம் தேதி) திருவள்ளூர் காஞ்சிபுரம் சென்னை செங்கல்பட்டு மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கன மழை முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.