தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை?
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்த நிலையில், மதுரை, தேனி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை, மணத்தட்டை, அய்யர்மலை உள்ளிட்ட பகுதிகளில் 2 மணிநேரம் கனமழை கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. திண்டுக்கல் மாவட்டத்தில் 3 மணிநேரம் மழை கொட்டித்தீர்த்ததால் சாலையில் தண்ணீர் தேங்கி பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒய்.எம்.ஆர்.பட்டி, அனுமந்த நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாகல்நகர் பகுதியில் கழிவு நீருடன் மழை நீரும் தேங்கி நின்றதால் சாலைகள் குளம்போல் காட்சியளித்தன. இதனால் மாணவ மாணவியர் சாலையை கடக்க கடும் சிரமம் அடைந்தனர். பெரம்பலூரில் பகலில் வெயில் வாட்டிய நிலையில், இரண்டாவது நாளாக இரவில் மழை பெய்தது. வேப்பந்தட்டை, பாடாலூர், குன்னம், வேப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
அதேபோல், ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் சுற்று வட்டாரங்களில் சுமார் அரைமணி நேரம் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வ.உ.சி சாலையில் இரண்டு நாட்களாக கொட்டிய கனமழையால் அரசு சீர் மரபினர் கல்லூரி மாணவர்கள் விடுதியை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த கட்டடத்துக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானது. இதே பகுதியில் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. நாட்டார் அம்மாய் காரைக்குடி கண்மாய் மற்றும் குடிகாரன் கம்மாய் ஆகிய கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுடியது.
மேலும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால்
செண்பகத்தோப்பு, மின்வெட்டிப்பாறை, பாப்பனாத்தான் கோவில் ஆற்றுபகுதி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் ஆற்று பகுதிகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்த நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.இதேபோல், தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. அல்லிநகரம், அன்னஞ்சி, அரண்மனைப்புதூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததால் இதமான சூழல் நிலவியது.
இதனிடையே, தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலின் மேல் பகுதியில் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுவதாகவும், இதனால் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.