'மாஸும் மேஜிக்கும் சந்திக்கும் இடம்' - அல்லு அர்ஜுன் & அட்லி காம்போ | நாளை அப்டேட் கன்ஃபார்ம்!
'ராஜா ராணி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. தனது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் அட்லி நடிகர் விஜயுடன் இணைந்து அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தார். இதையடுத்து, ஷாருக்கானுடன் இணைந்து 'ஜவான்' திரைப்படத்தை இயக்கினார். 'ஜவான்' திரைப்படத்திற்கு பின்னர் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான இயக்குநராக மாறினார். ஜவான்' திரைப்படம் சுமார் ரூ.1140 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை அட்லி இயக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக அனிரூத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக தெலுங்கு திரைவட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அதேபோல, அட்லியின் தெறி, மெர்சல் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்த நடிகை சமந்தா, இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகத் தகவல் வெளியானது. தற்போது, அதை உறுதிப்படுத்தும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, 'மாஸும் மேஜிக்கும் சந்திக்கும் இடம்' எனத் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அட்லீ `இப்படத்தில் கண்டிப்பாக மக்களை சர்ப்ரைஸ் செய்வேன் என தெரிவித்திருந்த நிலையில் நாளை வெளியாக உள்ள அப்டேட்டுக்காக தெலுங்கு மட்டுமல்ல தமிழ், மலையாளம் என அனைத்து ரசிகர்களிடையேயும் எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.