காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (ஏப்.11) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் வழுவிழந்தது. இருப்பினும், அதே மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஏப்.17ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
அதன்படி, புதுக்கோட்டை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.