மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நேற்று தமிழ்நாட்டில் சென்னை உள்பட அனேக இடங்களில் மழை பெய்தது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது. இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் புதுவை இடையே கரையைக் கடக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு குறைந்துள்ளது. தெற்கு ஆந்திராவிலும் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று மதியம் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.