இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கிறது. இது சென்னைக்கு கிழக்கே-தென் கிழக்கே 950 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 960 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவுக்கு 970 கி.மீ. தொலைவிலும் நிலைக் கொண்டிருக்கிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து, இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. அதனைத் தொடர்ந்து நாளை தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக உருவெடுக்கிறது. இதற்கு ஏற்கனவே அட்டவணையில் தாய்லாந்து நாடு பரிந்துரைத்த ‘மோந்தா' என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. மேலும் இந்த புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் தீவிரப் புயலாகவும் வலுவடையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.