இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை இன்று பிற்பகலுக்குள் விலகக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள், கேரளம், மாஹே, தெற்கு உள்கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கக்கூடும்" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.