நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு மையம் குறித்த விவரம் வெளியீடு!
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், ஹோமியோபதி உட்பட இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கும் தேசிய அளவில் நீட் தேர்வு (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், கலந்தாய்வின்போது மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி மாதம் 9-ம் தேதி தொடங்கி, மார்ச் 16 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இதையும் படியுங்கள் : ரூ.100 கோடி சொத்துகள் பறிமுதல்; முன்னாள் சார்பதிவாளர், அவர் மனைவிக்குச் சிறை - நீதிமன்றம் அதிரடி!
இந்த நிலையில், இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 23 லட்சத்து 81,833 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதில் 10,18,593 பேர் ஆண்கள், 13,63,216 பெண்கள், 24 பேர் திருநங்கைகள். மேலும், தமிழ்நாட்டில் 1.55 லட்சம் பேர் விண்ணிப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களின் வரிசையில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 3,39,125 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ இணையதளத்தில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள், நீட் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு, தங்களது தேர்வு மையம் எந்த நகரத்தில் அமையவிருக்கிறது என்பதை உறுதி செய்து நகல் எடுத்துக்கொள்ளலாம். விரைவில், நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டும் இணையதளத்தில் வெளியிடப்படவிருக்கிறது. அதனையும் மாணவர்கள் நகல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.