For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தேர்தல் பத்திரங்களின் சீரியல் நம்பர் எங்கே? - விளக்கம் அளிக்குமாறு SBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

12:12 PM Mar 15, 2024 IST | Web Editor
தேர்தல் பத்திரங்களின் சீரியல் நம்பர் எங்கே    விளக்கம் அளிக்குமாறு sbi க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Advertisement

தேர்தல் பத்திர சீரியல் நம்பர்கள் இல்லை என்றும்,  எந்த சீரியல் நம்பர் பத்திரங்களை கொடுத்து அரசியல் கட்சிகள் நிதி வாங்கினார்கள் என்ற விவரம் இல்லை என்றும், இது குறித்து ஸ்டேட் பேங்க் வரும் மார்ச் 18ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தேர்தல் பத்திர விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில்,  அவற்றின் பிரத்யேக எண்களை வெளியிடாதது ஏன் என்று எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாண்ட் எண்களை வெளியிடுமாறு எஸ்பிஐக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் 18 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது.  மேலும், இன்றைய விசாரணையின் போது எஸ்பிஐ வங்கி தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகததற்கும் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

முன்னதாக,  உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தது.  அதில் ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி ஆகிய மூன்று மதிப்புள்ள பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையில் 5 பேர் கொண்ட அமர்வு முன் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தேர்தல் பத்திர விவரங்களை எஸ்பிஐ வங்கி முழுமையாக வெளியிடாதது ஏன்? பத்திரங்களின் பிரத்யேக எண்ணை ஏன் குறிப்பிடப்படவில்லை என்று வினா எழுப்பினர்.  தேர்தல் பத்திரத்தின் எண்கள் தான் அதனை வாங்குபவர்களையும், நன்கொடையைப் பெற்றவர்களையும் இணைக்கக் கூடியது.  அதை அளித்தால் தான் விவரங்கள் முழுமை பெறும்.  எனவே அதனை வங்கி தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி திரட்டும் வழக்கம் கடந்த 2018-ம் ஆண்டில் 'தேர்தல் பத்திரம் திட்டம்' மூலம் நடைமுறைக்கு வந்தது.  இந்த சூழலில் தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி திரட்டும் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கூறி,  அந்த நடைமுறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து கடந்த மாதம் உத்தரவிட்டது  குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement