12-வது உலகத் தமிழ் மாநாடு எங்கு, எப்போது? - நவ. 26-ல் ஆலோசனைக்கூட்டம்!
12 ஆம் உலகத் தமிழ் மாநாட்டை எங்கு நடத்தலாம் என்பதற்கான கலந்தாய்வு சென்னையில் வரும் 26-ந் தேதி நடைபெறவுள்ளதாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு இந்தியக் கிளை அறிவித்துள்ளது.
தமிழ் மொழிக்கு உலக அளவில் கவனத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். உலகத் தமிழறிஞர்களை ஒன்று சேர்த்து அவர்களது ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் வகையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் திட்டமிட்டது.
இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கிய 1966-ம் ஆண்டு முதல், தற்போது வரை மொத்தம் 10 உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இது வரை தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, தஞ்சாவூரிலும், இலங்கை, மலேசியா, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் மொரீசியஸில் உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன.
அந்த வகையில் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, கடந்த ஜூலை 21 முதல் 23-ம் தேதி வரை மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் அமைந்துள்ள மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் 12வது உலகத்தமிழ் மாநாடு சிங்கப்பூரில் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் நடத்துவதற்கும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில் மலேசியாவில் நடைபெற்ற 11-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டும், கட்டுரை வழங்கியும் சிறப்பித்தற்கு நன்றி அறிவிப்புக் கூட்டம் வரும் நவம்பர் 26-ம் தேதி சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு இந்தியக் கிளை அறிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் சிங்கப்பூர், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மூன்று இடங்களில் எங்கு 12-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தலாம் என்பதற்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளவர்கள், தங்கள் பெயரைப் பதிவுசெய்தால் மட்டுமே இருக்கை, 11-ம் மாநாட்டு மலர், பேசும் நேரம் மற்றும் உணவும் தயார் செய்ய ஏதுவாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவுசெய்ய வேண்டிய மின்னஞ்சல் முகவரி iatrindia2015@gmail.com