திருச்செந்தூர் - திருநெல்வேலி வழித்தடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து எப்போது?
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளால் சேதமான நெல்லை திருச்செந்தூர் ரயில் பாதை பராமரிப்பு பணி 4-ம் தேதி மாலைக்குள் நிறைவு பெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தென் மாவட்டங்கள் அனைத்தும் தனித் தீவாக காட்சியளித்தன. அடிப்படை வசதிகள் இன்றி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தண்ணீரின் வேகத்தாலும், தேக்கங்களினாலும் சாலைகள், ரயில் தண்டவாளங்கள் என அனைத்து போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.
ரயில் நிலையம் மற்றும் தண்டவளப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் வெள்ளப்பெருக்கால் மண் அரிப்பு ஏற்பட்டு ரயில் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கின. இதனால் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது. இருப்பு பாதைகளை சீரமைக்கும் பணிகள் முடிவடையாத்தால், திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையிலான முன்பதிவில்லா ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, இரவு பகலாக ரயில்வே இருப்புப் பாதை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான ரயில் பாதையை அதிநவீன உபகரணங்கள் கொண்டு சரி செய்யும் பணி மற்றும் சோதனை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், நாளை மறுநாள் (ஜன. 4) தேதி பணிகள் நிறைவடைந்து, பின்னர் ரயில் இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஜன. 6-ம் தேதி முதல் திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையிலான ரயில்வே தடத்தில் வழக்கமான ரயில் சேவை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.