‘கங்குவா’ திரைப்படம் எப்போது ரிலீஸ்? படக்குழு அறிவிப்பு!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதன் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் பாஃப்டா தனஞ்சயன் தகவல் தெரிவித்தார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடித்து வருகிறார்.
உலகளவில் 38 மொழிகளில் ‘கங்குவா’ வெளியாக இருப்பதாக திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார். திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானல் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தன.
ஜமேக்ஸ் மற்றும் 3டி வடிவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில், அண்மையில் வெளியான ‘அனிமல்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்த பாபி தியோல், ‘உதிரன்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் போஸ்டர்கள், கிளிம்ஸ் வீடியோ உள்ளிட்டவை மக்களிடம் வரவேற்பை பெற்றது.
இதையும் படியுங்கள் : பிரதமர் மோடியை சந்தித்தால் உங்களுக்கும் அதானி அம்பானிக்கும் என்ன தொடர்பு? எனக் கேட்பேன் – டெல்லியில் ராகுல் காந்தி பேச்சு!
இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் தனஞ்செயன்செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் கங்குவா திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா கங்குவா திரைப்படத்தை வரும் திபாவளிக்கு வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார் எனவும் இந்தாண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் திரைப்படத்தின் வி.எஃப்.எக்ஸ் மற்றும் 3டி வேலைகள் முடிந்துவிடும் எனவும், கூறியுள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.