வங்கதேசத்தில் எப்போது தேர்தல்? தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் தகவல் !
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று முஹம்மது யூனுஸ் அறிவித்துள்ளார்.
வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு, அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த வன்முறையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வங்கதேசத்தில் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார்.
ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில், புதிய அதிபர் முகமது ஷஹாபுதீனுக்கு எதிராகவும் 5 கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அதிபர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்திய மாணவர்களை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். அப்போது அதிபரை ராஜினாமா செய்யக் கோரி முழக்கமிட்டதோடு தடுப்பை மீறி போராட்டக்காரர்கள் முன்னேற முயற்சித்ததால், பாதுகாப்பு படையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவதாக அறிவித்ததை தொடர்ந்து வங்கதேசத்தின் இடைக்கால பிரதமராக நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து முகமது சகாபுதீன் அதிபராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் பாகிஸ்தானுடனான போரில் வெற்றி பெற்ற தினத்தை முன்னிட்டு தொலைக்காட்சியில் முஹம்மது யூனுஸ் உரையாற்றினார். அப்போது அவர், “தேவையான சீர்திருத்தங்களை நிறைவேற்றிய பிறகு அடுத்த பொதுத் தேர்தலை 2025-ன் இறுதியில் அல்லது 2026-ன் முதல் பாதிக்குள் நடத்த முடியும். அனைத்து முக்கிய சீர்திருத்தங்களையும் முடித்துவிட்டு அதன் பிறகு தேர்தலை நடத்த அனைவரிடமும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
தற்போது தேர்தல் சீர்திருத்த ஆணையம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகளை பொறுத்தே தேர்தலுக்கான காலக்கெடு அமையும். எனினும், அரசியல் கருத்தொற்றுமை காரணமாக, சிறிய அளவிலான சீர்திருத்தங்களுடன் குறைபாடற்ற வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றால், 2025ம் ஆண்டின் இறுதியில் தேர்தலை நடத்துவது சாத்தியமாகும்.
அதேநேரத்தில், எதிர்பார்க்கும் அளவுக்கு தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் பிறகு தேர்தல் நடத்தப்படலாம் என்றால் அதற்கு கூடுதலாக 6 மாதங்கள் ஆகலாம். ஏனெனில், தேர்தல் சீர்திருத்தங்களை முழு அளவில் மேற்கொள்ள வேண்டுமானால், தேர்தல் சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் தேசிய ஒருமித்த கருத்துகளின் அடிப்படையிலேயே அதனை செய்ய முடியும்” என்று கூறியுள்ளார்.