Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

100 நாள் வேலை திட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது? அத்திட்டத்தில் உள்ள பிரச்னை மற்றும் பின்னணி என்ன?

10:44 AM Nov 10, 2023 IST | Web Editor
Advertisement

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் இணைந்து பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கப்படாததை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப் போவதாக,  கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.. 100 நாள் வேலை திட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது? அத்திட்டத்தில் உள்ள பிரச்னை மற்றும் பின்னணி குறித்து விவரிக்கிறது.. இந்த சிறப்பு தொகுப்பு...

Advertisement

இந்தியா முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் புரியும் படி சொல்லனும்னா 100 நாள் வேலைத் திட்டம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்,  கடந்த 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.  கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு வருவாய் மற்றும் வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில், கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தமிழ்நாட்டில், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் 200 மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்தது.

பின்னர் படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டது.  இந்த திட்டத்தின் மூலம்,  கிராமங்களில் நில மேம்பாடு,  மழைநீர் சேகரிப்பு,  வறட்சித் தடுப்பு, பாசனக் கால்வாய்,  சாலை கட்டமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இத்திட்டத்தின் மூலம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம் வழங்கப்படுகிறது.  மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் 85 சதவீததிற்கும் மேற்பட்ட பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர்...கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, பலரும் இத்திட்டத்தில் இணைந்தனர்.

ஆண்டுக்கு 100 நாட்கள் வேலையை உறுதி செய்யும் இந்த திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு,  வேலை தர அரசு தவறினால்,  பாதிக்கப்பட்டவருக்கு முதல் 30 நாட்களுக்கு சம்பளத்தில் கால் பங்கு ஊதியத்தை அரசு தர வேண்டும்.  பணியின் போது ஏதாவது விபத்து நேர்ந்தால்,  மாநில அரசு மூலம் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு, 50 சதவீதம் ஊதியத்திற்கு குறையால் பணம் கொடுக்கப்படும்.  உயிரிழப்பு ஏற்பட்டால் இறந்தவரின் வாரிசுக்கு மத்திய அரசு மூலம் 25000 ரூபாய் நிதியுதவி வழங்குவது உள்ளிட்டவை இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

இந்நிலையில், இத்திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்க்கு வேலை இல்லை,.. செய்த வேலைக்கு உரிய ஊதியம் இல்லை.... வேலைக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படவில்லை.... என பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.. மத்திய அரசு இதற்கான நிதியை வழங்காமல், காலம் தாழ்த்தி வருவதே இதற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து ஊதியம் வழங்காததை கண்டித்து, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொழிலாளர்கள்,  தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியும் போராட்டத்தை அறிவித்துள்ளது.  காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், பயனுள்ள இந்த திட்டத்தை முடக்க நினைக்கிறது, மத்திய அரசை என்றும் குற்றம்சாட்டுகிறார்கள். எனவே, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முன்பாக, நவம்பர் 15ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.. எந்த நோக்கத்துக்காக 100 நாள் வேலை திட்டம் தொடங்கப்பட்டதோ, அத்திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு படுகொலை செய்து வருவாதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு, கிராமப்புற பெண்களுக்கான பொருளாதார பாதுகாப்பு உள்ளிட்டவற்றையும் இந்த திட்டம் வழங்குவதாக கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டம் என்று மத்திய அரசும் தெரிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு உலக வங்கியின் வளர்ச்சி அறிக்கையில்,''ஊரக வளர்ச்சிக்கான சிறந்த எடுத்துக்காட்டு'' இந்த திட்டம் என்று குறிப்பிட்டது.

அதே நேரத்தில விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை, குறிப்பாக, 100 நாள் வேலைத் திட்டத்தால் விவசாய பணிகளுக்கு, தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. ஆகையால், இந்த திட்டத்தை விவசாய பணிகளுக்கும் விரிவாக்க வேண்டும்.. திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. அவற்றை ஒழுங்குபடுத்தி, முறையாக கண்காணித்து, திட்டத்தின் பலன், முழுமையாக கிராமப்புற மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திட்டத்தை முறையாக கண்காணிப்பது நீண்ட கால செயல்திட்டம். முதலில், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு 100 நாட்களுக்கு மேல் வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். இனியும் காலம் தாழ்த்தாமல், மத்திய அரசு நிதியை விடுவிக்க வேண்டும் என்பதே தொழிலாளர்கள் கோரிக்கையாக உள்ளது.

Advertisement
Next Article