சென்னையில் ஃபார்முலா ரேஸ் கார் பந்தயம் எப்போது? - வெளியானது புதிய அறிவிப்பு
சென்னையில் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சென்னை தீவுத்திடலில் நடைபெறவிருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம், கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதாவது கடந்த டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் திட்டமிடப்பட்ட பந்தயம், மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் போட்டியை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து வரும்ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில், ஃபார்முலா 4 கார்பந்தயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் மையப்பகுதியில் இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள் : உயர்கிறதா சர்க்கரை விலை? மத்திய உணவுத் துறைச் செயலர் வெளியிட்ட முக்கிய தகவல்!
இந்தியாவில் முதல்முறையாக ஃபார்முலா ரேஸ் கார் பந்தயம் நடைபெற உள்ளது. இந்த ஃபார்முலா ரேஸ் கார் பந்தயம், சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு கொண்ட சாலையில் இரவு போட்டியாக நடத்தப்பட உள்ளது. அதன்படி, தீவுத்திடலில் தொடங்கும் கார் பந்தயமானது அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடைவது போல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல்முறையாக இரவுப் போட்டியாக சாலை வழியாக நடத்தப்படும் கார் பந்தயம் இது என்பதால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.