“இசைக்கடவுள் என்று சொல்லும்போது எனக்கு என்ன தோன்றும்மென்றால்...” - இளையராஜா நெகிழ்ச்சி!
இசையமைப்பாளர் இளையராஜா தனது முதல் வேலியண்ட் சிம்பொனியை நேற்று முன்தினம்(மார்ச்.08) லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் அரங்கேற்றினார். இந்த நிலையில் சென்னை வந்த அவருக்கு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பிலும் மற்ற அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்பு இளையராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “நான் எழுதிய சிம்பொனியை இசை வல்லுநர்கள் நேர்த்தியாக வாசித்தனர். இங்கு இருந்து போனதும் அவர்களின் ஒத்திகையில் கலந்துகொள்ளத்தான் நேரம் இருந்தது. சிம்பொனி நான்கு பதிகளாக கொண்டது. வெஸ்டர்ன் இசையில் அந்த நான்கு பகுதிகளை வாசித்து முடிக்கும்வரை யாரும் கைத்தட்ட மாட்டார்கள். கை தட்ட கூடாது அது விதிமுறை. ஆனால், நம்முடைய ரசிகர்களும் பொதுமக்களும் ஒரு பகுதி முடிந்ததும் கை தட்டுகிறார்கள். அங்கு வாசித்தவர்கள் ஆச்சர்யத்துடன் என்னைப் பார்த்தார்கள். இன்னைக்கு அடித்தால் நாளைக்கா அழுவோம். அதுபோல் அப்போது அடித்ததை நம் ஆட்கள் அப்போதே வெளிப்படுத்திகிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை கரகோஷம் மூலம்தான் தெரிவிக்க முடியும். இந்த சிம்பொனி எல்லா இசை வல்லுநர்களாலும் பாராட்டப்பட்டது. நீங்கள் என்னை மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்தது இன்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் மாறியுள்ளது.
முதலமைச்சர் அரசு மரியாதையோடு என்னை வரவேற்றது நெஞ்சை நெகிழ வைக்கிறது. அதே போல் தமிழ்நாடு மக்கள் அனைவரும் என்னை வாழ்த்தி வரவேற்பது பெருமையாக உள்ளது. இந்த இசையை நீங்கள் டவுன்லோடு செய்து கேட்க கூடாது. டவுன்லோடு என்று சொன்னதும் மட்டமாக நினைக்க வேண்டாம். மக்கள் நேரடியாக வாசிப்பதை கேட்க வேண்டும் அதன் அனுபவமே வேறு, 80 வாத்தியங்களில் வரும் இசை மற்ற ஒலிப்பதிவகங்களில் கேட்காது. நான் பாடல்களை பதிவுசெய்யும்போது ஒரு நோட்டில் பிரச்சனை இருந்தாலும் விட மாட்டேன். அது மாதிரி மேடையில் தவறு செய்கிறார்களா? என்று கவனித்து கொண்டிருந்தேன். இரண்டாவது பகுதியில் என்னுடைய சினிமா பாடலை வாசிக்க வைத்து, நானும் அவர்களுடன் ஒரு பாடலை பாடினேன். அது மிகவும் கஷ்டமானது . ஏனென்றால் அவர்களோடு பாடி பழக்கமில்லை. ஆனால், நான் அங்கு பாடியதற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள்.
இந்த சிம்பொனி இசை 13 தேசங்களில் நடக்கவிருப்பதற்கு நாட்கள் குறித்தாகிவிட்டது. அக்டோபர் 6 துபாயில், செப்டம்பர் 6 பாரிஸில் பின்பு ஜெர்மன் போன்ற எல்லா நாடுகளிலும் இந்த சிம்பொனி இசை போகிறது. தமிழர்கள் இல்லாத இடத்தில் அரங்கேற்றுவதற்கு ஸ்பான்சர்ஸ் புக் பண்ணி தேதியை சொல்லிவிட்டார்கள். நம்ம மக்கள் அதை கேட்க வேண்டாமா? அதுவரை அமைதியாக இருக்க வேண்டும். அந்த ஸ்பாட்டில் அமைதியாக நீங்கள் கேட்பதுதான் இசை பாரம்பரியத்தில் மிகவும் உச்சகட்டமான விஷயம். மக்கள் என்னை இசைக்கடவுள் என்கிறார்கள். நான் சாதாரண மனிதனைபோல்தான் வேலை செய்துகொண்டிருக்கிறேன். என்னைப் பற்றி எனக்கு ஒன்றும் கிடையாது. என்னை இசைக்கடவுள், தெய்வம் என்று சொல்லும்போது எனக்கு என்ன தோன்றும் என்றால், இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிட்டீங்களே பா என்றுதான் தோன்றும். நீங்கள் மலர்ந்த முகத்துடன் என்னை வரவேற்றதற்கு மிகவும் நன்றி”
இவ்வாறு இசையமைப்பாளர் இளையராஜா பேசியுள்ளார்.