"காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்!" - மே தினத்தை ஒட்டி தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
உழைக்கும் தொழிலாளர் குடும்பங்கள், கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்ந்து உன்னத நிலைபெற நெஞ்சார வாழ்த்துவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மே தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நாளை உலகம் முழுவதும் உலக தொழிலாளர்கள் தினமாக மே தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மே தின வாழ்த்துக்களை அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
"காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்"- என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொழிலாளர்களின் தியாக உழைப்பைப் போற்றிப் பாடுவார். தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்தில் பல மணி நேரம் வேலை செய்திட வாட்டி வதைக்கப்பட்ட தொழிலாளர் சமுதாயம் எட்டு மணி நேர வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி ரத்தம் சிந்திப் போராடி, உயிர்ப் பலி தந்து தொழிலாளர் சமுதாயம் பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள் தான் மே நாள்.
திமுக தொழிலாளர்களை உயிராக மதிக்கும் இயக்கம். தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலாளர்களின் நலம்நாடிப் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது. 1969 ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அமைந்த திமுக அரசுதான் தொழிலாளர் நலனில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தனியே தொழிலாளர் நலத் துறையையும், தொழிலாளர் நல அமைச்சகத்தையும் ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள் : பாலியல் புகாருக்கு உள்ளாகியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி!
1969-ஆம் ஆண்டில் மே முதல் நாளை ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை நாளாக அறிவித்துச் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தப்பட்டது. 1969-இல் கணபதியாபிள்ளை ஆணையப் பரிந்துரையை ஏற்று, அவசரச் சட்டம் பிறப்பித்து விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்கப்பட்டது. பீடித் தொழில், பனியன் நெசவு, தோல் பதனிடும் தொழில், எண்ணெய் ஆலைகள், செங்கல் சூளை, உப்பளம் முதலியவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கப் பலம் இல்லாமையால் போதிய ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்பட்டு வந்த நிலைகண்டு அத்தொழிலாளர்களுக்குத் தொழில் முகவர்களிடம் பேசி அவர்களுக்கெல்லாம் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கச் செய்தது திமுக ஆட்சி.
1971-இல் "குடியிருப்பு அனுபோகதாரர்கள் சட்டம்" த்தின்படி 1,73,748 விவசாயத் தொழிளர்களுக்கு அவர்கள் குடியிருக்கும் வீட்டு மனையை அவர்களுக்கே சொந்தமாக்கியது. 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வந்து. கிடைத்த உபரி நிலங்களை லட்சக்கணக்கான ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்க வழிவகை செய்தது. தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல்," பணிக்கொடை" வழங்கும் திட்டம் கண்டது. விபத்துகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பதற்காகத் தொழில் விபத்து நிவாரண நிதி திட்டம் உருவாக்கியது. 1990-ல் கையினால் செய்யப்படும் தீப்பெட்டி மீதான 8 சதவீத விற்பனை வரியை ரத்து செய்து லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தடுத்தது. மே தின நூற்றாண்டு விழாவினையொட்டி 1990-இல் சென்னை நேப்பியர் பூங்காவிற்கு "மே தினப் பூங்கா" எனப் பெயர் சூட்டி, அங்கு மே தின நினைவுச் சின்னத்தை அமைத்தது, முதலான பல்வேறு தொழிலாளர் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடைகள் மற்றும் நிறுவனங்களில் அனைத்துப் பணியாளர்களும் அமர்வதற்கு, அவர்கள் பணிபுரியும் இடங்களில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தித் தருதல் மற்றும் பணியாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பான குடிநீர், கழிப்பிடம், ஓய்வு அறை மற்றும் உணவருந்தும் அறை மற்றும் முதலுதவி வசதிகள் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் 1947 ஆம் ஆண்டைய தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு தொழிலாளர் நலன்கள் இந்த அரசினால் பாதுகாக்கப்பட்டுள்ளன.