மேற்கு வங்க ரயில் விபத்துக்கு காரணம் இது தான்? வெளியான தகவல்!
அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி நேற்று காலை 8 மணியளவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைலட் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்த ரயில் பாதையில் தானியங்கி விபத்து தடுப்பு தொழில்நுட்பமான ‘கவச்’ தொழில்நுட்பம் நிறுவப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த பாலசோா் ரயில் விபத்துக்குப் பிறகு ரயில் பாதைகளில் ‘கவச்’ தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்படும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று விபத்து நடந்த ரயில் பாதையில் அந்தத் தொழில்நுட்பம் இன்னும் நிறுவப்படாமல் இருந்தது.
இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவா் ஜெயா வா்மா சின்ஹா கூறுயதாவது, "ரயில் விபத்து நிகழ்ந்த அகா்தலா - சீல்டா ரயில் வழித் தடத்தில் தானியங்கி ரயில் விபத்து தடுப்பு தொழில்நுட்பத்தை நிறுவத் திட்டமிடப்பட்டது. ஆனால், அந்த தொழில்நுட்பம் இன்னும் அங்கு நிறுவப்படவில்லை. இந்த ரயில் விபத்துக்கு மனிதத் தவறும் காரணமாக இருக்க வாய்ப்புள்ளது.
அதன்படி, சரக்கு ரயில் ஓட்டுநா் சிக்னலை மதிக்காமல் மீறியதும் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம். இந்த விபத்தில் ரயில் காா்டு பெட்டியும், பொருள்கள் ஏற்றிச் செல்லும் பாா்சல் பெட்டியும், பயணிகள் பெட்டி ஒன்றும் மோசமாக சேதமடைந்தன. மற்ற பயணிகள் பெட்டிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை" என்றாா்.