ஏர் இந்தியா விமான விபத்துக்கு என்ன காரணம்? அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
கடந்த மாதம் 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில வினாடிகளிலேயே மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமன்த்தில் பயணித்த 241 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விடுதி மற்றும் அருகில் உள்ளவர்கள் 19 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மொத்தம் 260 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துக்கு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இந்தக் குழு விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் விமான விபத்து தொடர்பான 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை வெளியாகியுள்ளது. விமான விபத்தில் கண்டெடுக்கப்பட்ட வாய்ஸ் ரெக்கார்டர், கருப்புப் பெட்டி மூலம் தகவல் சேகரித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே எரிபொருள் விநியோகம் தடைபட்டதால் 2 என்ஜின்களும் செயலிழந்துள்ளது. விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே 2 விமானிகள் பேசிக்கொண்டுள்ளனர். அதன்படி, ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு மற்றொரு விமானி தான் அடைக்கவில்லை என கூறியுள்ளார். 2 என்ஜின்களும் செயலிழக்கும்போது RAT என்ற அமைப்பு மூலம் விமானத்தை அவசரமாக இயக்க முயற்சி நடந்துள்ளது. எரிபொருள் செல்லும் 2 வால்வுகளும் மீண்டும் செயல்படத் தொடங்கினாலும் ஒரு என்ஜின் மட்டுமே ஓடத் தொடங்கியுள்ளது. ஆனாலும் விமானம் மேல் எழும்ப முடியாமல் தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது.
விமானத்தை உருவாக்கிய போயிங் நிறுவனம் மற்றும் என்ஜினை தயாரித்த ஜெனரல் எலக்ட்ரானிக்ஸ் மீது எந்த நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்படவில்லை. கடும் சேதமடைந்த கருப்புப் பெட்டியை அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லாமல் டெல்லியிலேயே வைத்து தரவுகளை சேகரித்துள்ளனர். முதற்கட்ட அறிக்கை வெளியான நிலையில் விசாரணை தொடரும் என்றும் முழுமையான அறிக்கை வர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்றும் விமான விபத்து குறித்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், கட்டிடங்கள் மீது விழுந்து தீப்பிடித்ததே விமானம் முற்றிலும் உருக்குலைய காரணம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.