Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்ன? அமைச்சர் #ThangamThennarasu பேட்டி!

01:20 PM Oct 08, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் 14 புதிய தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை தலைமை செயலகத்தில் இன்று (அக். 8) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கடந்த மாதம் தமிழக அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அனைத்து துறை அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி பிரதானமாக ஆலோசிக்கப்பட்டது. அதேபோல் முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் போது, பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அந்நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.

அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு, முதன் முதலாக புதிய அமைச்சர்களான ஆர்.ராமசந்திரன், கோவி செழியன் ஆகியோர் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி , நாசர் ஆகியோரும் நீண்ட நாட்களுக்கு பிறகு அமைச்சரவை கூட்டத்தில் இன்று பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த, பொது மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்க பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பின் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:

“தோல் அல்லாத காலணிகள் தயாரிப்பு, பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா உற்பத்தி உள்ளிட்ட 14 முதலீடுகள் வந்துள்ளன. ரூ.9000 கோடி முதலீட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்க உள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ரூ.10325 கோடி முதலீட்டில் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளன. முதலீடுகளுக்கான ஒப்புதல் அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் அமெரிக்க பயணம் மற்றும் அண்மையில் நடைபெற்ற முதலீடுகளுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 46 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளன. இன்றைய அமைச்சரவை ரூ.38,698.80 கோடி முதலீட்டிற்கான 14 புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முதலீடுகள் மூலம் 46,931 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இம்முதலீடுகள் மின்னணு துறை சார்ந்த பிரின்டெட் சர்க்யூட் போர்டுகள் (PCB), குறைந்த மின்னழுத்த பேனல்கள், மொபைல் ஃபோன் தயாரிப்புகளுக்கான காட்சிமுறை உதிரிபாகங்கள் மற்றும் உறை தயாரித்தல், பயணிகள் சொகுசு வாகன உற்பத்தி, வாகனங்கள் சார்ந்த உதிரிபாகங்கள், உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அதற்கான மென்பொருட்கள், பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்கள், மருத்துவத் துறை சார்ந்த ஊசி மருந்துகள் மற்றும் இதர மருந்துபொருட்கள் தயாரிப்பு, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி, எரிசக்தி துறை சார்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியுடன் பசுமை ஹைட்ரஜன் / பசுமை அம்மோனியா உற்பத்தி. மின்வாகனங்கள் மற்றும் தொலைதொடர்பு நெட்வொர்க்குகள் குறித்த ஆராய்ச்சி & மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (ரூ.9000 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 5000 நபர்கள்),

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஃபாக்ஸ்கான் குழுமத்தின் துணை நிறுவனமான யூசான் டெக்னாலஜி (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (ரூ.13180 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 14000 நபர்கள்),

தூத்துக்குடி, விருதுநகர். திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் PSG குழுமத்தின் துணை நிறுவனமான லீப் கீரின் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (ரூ.10375 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 3000 நபர்கள்),

அரியலூர் மாவட்டத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் குழுமத்தின் துணை நிறுவனமான ஃப்ரீடிரெண்ட் இன்டஸ்ட்ரியல் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ரூ.1000 கோடி முதலீடு. வேலைவாய்ப்பு 15000 நபர்கள்),

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேன்ஸ் சர்க்யூட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ரூ.1395 கோடி முதலீடு. வேலைவாய்ப்பு 1033 நபர்கள்),

கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூரில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் (ரூ.612.60 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 1200 நபர்கள்) ஆகியவை குறிப்பிடத்தக்க முதலீட்டுத் திட்டங்களாகும்”

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

Tags :
cabinet meetingCMO TamilNaduInvestmentsMK StalinNews7TamilThangam thennarasuTN Govt
Advertisement
Next Article