கோவை இளம் பெண் கடத்தல் விவகாரம் : அரசும், காவல்துறையும் அலட்சியமாக செயல்படுவதாக அன்புமணி ராமதாஸ் குற்றசாட்டு..!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,
“கோவை இருகூர் பகுதியில் இளம் பெண் ஒருவர் மகிழுந்தில் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருப்பதும், அப்பெண் மகிழுந்துக்குள் இருந்தவாறு அலரும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதும் அதிர்ச்சியளிக்கின்றன. ஆனால், இந்த விஷயத்தில் அரசும், காவல்துறையும் தீவிரம் காட்டாமல் அலட்சியமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. பெண் கடத்தப்பட்டது தொடர்பான விவகாரத்தில் உண்மை நிலையை மக்களுக்குத் தெரிவிக்கவும், பெண் கடத்தப்பட்டிருந்தால் அவரை மீட்கவும் நடவடிக்கை வேண்டிய காவல்துறை, கோவையில் எந்த பெண்ணும் கட்டத்தப்பட்டதாக புகார்கள் வரவில்லை என்று பொறுப்பற்று பதில் கூறியுள்ளது.
இருகூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை மகிழுந்தில் வந்த சிலர் கடத்திச் சென்றதைப் பார்த்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அது குறித்து காவல்துறைக்கும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இவ்வளவுக்குப் பிறகு புகார் வரவில்லை என்று காவல்துறை கூறியுள்ளது. அப்படியானால், முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து தடுக்கப்பட வேண்டிய குற்றமாக இருந்தாலும் அது குறித்து எவரேனும் புகார் அளித்தால் தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ, இந்த குற்றங்களைத் தடுக்க வேண்டிய பொறுப்பு தமக்கு இல்லை என்பதைப் போல, இன்னொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திமுகவை எந்தக் கொம்பனாலும் தொடக்கூட முடியாது என்று வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். திமுகவை யாரால் தொட முடியும்; திமுகவை யாரால் வீழ்த்த முடியும் என்பதெல்லாம் தேர்தலின் போது தீர்மானிக்கப்படும்.
இன்றைய சூழலில் பெண்கள் உள்பட தமிழக மக்கள் அனைவரும் அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. அதில் முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். கோவையில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணுக்கு ஏதேனும் ஆபத்து நேருவதற்கு முன்பு அவரை மீட்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்”
என்று தெரிவித்துள்ளார்.