“என்னயா.. காசு.. காசு.. காசு..” - இணையத்தில் பகிரப்பட்டு வரும் இடி முழக்கம்!
மறைந்த தேமுதிக தலைவர் ‘கேப்டன்’ விஜயகாந்த்தின் மேடை பேச்சு ஒன்றில் அவர் உருக்கமாக பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் நேற்று காலை அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து காலை 9:30 மணி அளவில் விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி, அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2006-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, விஜயகாந்த் உடல் இன்று பொதுமக்களின் பார்வைக்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்படுவதாக தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டது. இன்று அதிகாலை 4மணி அளவில் தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத் திடலுக்கு சாலை மார்க்கமாக காலை 6 மணியளவில் கொண்டு வரப்பட்டது. இன்று பிற்பகல் 1மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு இன்று மாலை 4:45மணிக்கு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் தனது தேமுதிக கட்சியின் பிரச்சாரம் ஒன்றில் பேசிய வீடியோவில்,
“என்னோடது என்ன வேணாலும் நீ எடுத்துக்க. மக்கள் கொடுத்தது எடுத்தா எடுத்துக்கிட்டு போயா. எனக்கு தேவையே இல்லை. எனக்குன்னு ஏதோ ஒரு இடத்துல இடம் கொடுப்பீங்க இல்ல. என்னோட மனைவிக்குனு ஒரு இடம் இருக்குனு சட்டத்துல இருக்குல்ல. அதே போல என்னோட பிள்ளைக்கு இடம் இருக்கும்ல. அது கிடைச்சா எனக்கு போதும். எவ்வளவு பேர் இருக்கீங்க. நாங்க நாலு பேரும் வந்தா ஒரு வேளை சோறு போடா மாட்டீங்களா? அதுவே போதும் நமக்கு முடிஞ்சுடும். இத்தனை பேர் வீட்டுக்கு நான் போயிட்டு வந்தாலே முடிஞ்சுடும்.
இந்த வீடியோ இன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஆனால் இணையத்தில் விஜயகாந்த் என்று தேடினால் இந்த வீடியோவை கடக்காமல் சென்றிருக்க முடியாது. விஜயகாந்துக்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.