"பிரகாஷ் ராஜுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?" - மத்திய அமைச்சர் எல். முருகன் கேள்வி!
பிரகாஷ்ராஜுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? பிரகாஷ்ராஜின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102 தொகுதிகள்) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88 தொகுதிகள்) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93 தொகுதிகள்), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96 தொகுதிகள்), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49 தொகுதிகள்), கடந்த மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு (58 தொகுதிகள்) நடைபெற்றது.
7-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (57 தொகுதிகள்) நடைபெறுகிறது. தேர்தலில் நாடு முழுவதும் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தேச நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்தேன். 7 கட்ட வாக்குப்பதிவிலும் மக்கள் பாஜகவிற்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற பிரதமர் மோடியால் மட்டுமே முடியும். 400 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று 3-வது முறையாக மோடி பிரதமராக பொறுப்பு ஏற்பார். பிரதமர் மோடி சிறு வயது முதலே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்.
பிரதமர் மோடி எந்த இடத்திலும் ரூ.15 லட்சம் தருவேன் என கூறவில்லை. எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் செய்த சதியால் பிரதமர் மோடி ரூ.15 லட்சம் தருவதாக வதந்தி பரப்பப்பட்டது. பிரகாஷ்ராஜுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம். பிரகாஷ்ராஜின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது."
இவ்வாறு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.