மல்ஹார் சான்றிதழ் என்றால் என்ன? மகாராஷ்டிராவின் நிலைப்பாட்டிற்கு வலுக்கும் எதிர்ப்புகள்!
மகாராஷ்டிரா மாநில மீன்வளத்துறை அமைச்சர் நிதேஷ் ராணே கடந்த மார்ச் 11 ஆம் தேதி அம்மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஆடு மற்றும் கோழி இறைச்சி விற்பனையாளர்களை மல்ஹார் சான்றிதழை பெற்றுக்கொள்வற்காக https://www.malharcertification.com/ என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்த இணையதள சான்றிதழ் பெற்ற இறைச்சி கடைகளில், இந்து மத காலாச்சாரத்தின்படி(ஜட்கா) பலியிடப்படும் ஆட்டின் இறைச்சிகள் புதியதாகவும், சுத்தமாகவும், உமிழ்நீர் மாசுபாட்டிலிருந்து விடுபட்டதாகவும், வேறு எந்த விலங்கு இறைச்சியுடனும் கலக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. இந்த இறைச்சி இந்து காதிக் சமூக விற்பனையாளர்கள் மூலம் மட்டுமே கிடைக்கிறது.
மல்ஹார் சான்றிதழ் பெறுவதற்காக இணையதளத்தை அறிமுகப்படுத்திய பிறகு, அமைச்சர் நிதேஷ் ராணே, இந்த முயற்சி மகாராஷ்டிராவின் இந்து சமூகத்திற்காக நாங்கள் ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்றும் , இந்து பழக்கவழக்கங்களின்படி தயாரிக்கப்பட்ட இறைச்சியை இந்துக்கள் வாங்க ஏதுவாதுவாக இருக்கும் என்றும் பேசினார். ஏற்கெனவே இஸ்லாமியர்கள் ஹலால் முறைப்படி விலங்குகளை வெட்டி இறைச்சி விற்பனை செய்வது வருவது வழக்கமாக இருந்து வரும் சூழலில், இந்த மல்ஹார் சான்றிதழ் அறிமுகப்படுத்தியிருப்பது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி(சரத் பவார்), அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் உள்ளிட்ட பல்வேறு கட்சியைத் சேர்ந்த முக்கியத் தலைவர்கள், இது மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் முயற்சி என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.