என்ன நடக்கிறது லெபனானில் ? - பேஜர்களை தொடர்ந்து #WalkieTalkies வெடித்துச் சிதறியதால் பரபரப்பு!
லெபனான் நாட்டில் நேற்று பேஜர்கள் வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஹிஸ்புல்லா அமைப்பினரின் வாக்கி டாக்கி கருவிகள் வெடித்து சிதறியுள்ளது.
பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பைப் போன்று லெபனானில் இயங்கி வரும் அமைப்பு ஹிஸ்புல்லா எனும் பெயர் கொண்ட அமைப்பாகும். கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வரும் இஸ்ரேல் பாலஸ்தீன போரில் இஸ்ரேலுக்கு எதிராக பல தாக்குதல்களை ஹிஸ்புல்லா அமைப்பு நடத்தி வந்தது. இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த செய்தி பரிமாற்ற பேஜர்கள் நேற்றைய தினம் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பேஜர் வெடிப்பில் இதுவரை 9 பேர் உயிரிழந்த நிலையில் 3000 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். தைவானில் உள்ள GO APPOLO நிறுவனத்திடம் இருந்து ஆர்டர் செய்து பிரத்தேயகமாக தயாரிக்கப்பட்ட இந்த பேஜர்கள் இந்த வருட தொடக்கத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. மொபைல் போன்களில் தகவல்கள் கசியும் அபாயம் உள்ளதால் பேஜர் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பேஜர்கள் தயாரிக்கப்படும்போதே அதில் 3 கிராம் வெடிபொருள் வைக்கப்பட்டது என்றும் இதற்கு பின்னால் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத்தின் சூழ்ச்சி உள்ளதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
சினிமாவில் வருவது போல் இதுபோன்ற பெரிய அளவிலான தாக்குதலை ஹேக்கிங் மூலம் செய்ய முடியும் என்று நிரூபணமாகியுள்ள நிலையில் தற்போது உலகம் முழுவதிலும் அனைவரும் கைகளிலும் உள்ள ஸ்மார்ட் போன்களை இதுபோன்ற ஹேக்கிங் மூலம் அடுத்தடுத்து வெடிக்க செய்ய முடியுமா என்ற கேள்வியே பலரை அச்சமூட்டியுள்ளது.
இந்த சம்பவங்கள் நடைபெற்று பரபரப்புகளும் அதிர்ச்சியும் அடங்குவதற்குள் அடுத்ததாக ஹிஸ்புல்லா அமைப்பினரின் வாக்கிடாக்கிகள் வெடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. லெபனான் தெற்கு பகுதிகளிலும் தலைநகர் பெய்ரூட்டில் பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி தகவல் பரிமாற்ற கருவிகளான வாக்கி டாக்கி கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.