Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேர்தல் பத்திரம் என்றால் என்ன?

11:42 AM Feb 15, 2024 IST | Web Editor
Advertisement

தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில்,  தேர்தல் பத்திரம் என்றால் என்ன?  என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.... 

Advertisement

மத்திய அரசு 2017ம் ஆண்டு தேர்தல் பத்திர திட்டத்தை அறிமுகம் செய்தது.  மக்களவை ஒப்புதல் இல்லாமலேயே,  கடந்த 2018 ஜனவரி 29 முதல் தேர்தல் பத்திர முறை நடைமுறைக்கும் வந்தது.  இதன் மூலம் எந்த ஒரு இந்திய குடிமகன் அல்லது நிறுவனம், அவர்கள் விரும்பும் கட்சிக்கு நன்கொடை வழங்கலாம்.  ஸ்டேட் வங்கியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 29 கிளையில் இருந்து மட்டுமே தேர்தல் பத்திரத்தை பெற முடியும்.

நிதி வழங்குபவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள்,  மற்றவர்கள் அறிய முடியாதது இதன் கூடுதல் அம்சமாகும்.  தேர்தல் பத்திரம் பெற்ற கட்சிகள் 15 நாட்களுக்குள்,  எந்தவித கட்டுபாடுமின்றி,  அதை நிதியாக மாற்றிக்கொள்ளலாம்,  இல்லையெனில் அந்த தேர்தல் பத்திரம் பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என அந்த திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.  ஒரு கட்சி தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற வேண்டும் என்றால், சட்டப்பேரவை அல்லது மக்களவைத் தேர்தலில் குறைந்தது ஒரு சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.

இதன்படி,  ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் இருந்து ரூ.1,000 முதல் ரூ.10,000,  ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி வரை எந்த மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் வாங்கலாம்...  தேர்தல் பத்திரங்களின் ஆயுள் 15 நாட்கள் மட்டுமே.. அவற்றை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க மட்டுமே பயன்படுத்த முடியும்.

தேர்தல் பத்திரங்கள்,  நாணயம் போன்று பலமுறை கை மாறுவதாலும் அது யார் பெயரில் வழங்கப்படுகிறது என்பது தெரியாததாலும் இந்த பத்திரங்கள் மூலம் பண மோசடி நடக்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது..  அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தில்,,  நிதி வழங்குபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைத்திருப்பது,  கருப்பு பணத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.  இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அரசியல் கட்சிகளுக்குத்தான் சாதகமாக இருக்கிறது என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும்,  இத்திட்டத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்று எதிர் கட்சிகள் கருத்து தெரிவித்து வந்த நிலையில்,  இத்திட்டத்தை ரத்து செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். கடந்த 2022 ம் ஆண்டு தலைமை நீதிபதி ஒய்.டி. சந்திரசூட் தலைமையில் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்தது.  தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க 2023ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது.  பின்னர், வழக்கின் முக்கியதுவம் கருதி 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில்,  கடந்த அக்டோபர் 31ம் தேதி தலைமை நீதிபதி சந்திரசூட்,  நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா,  பி.ஆர்.கவாய்,  பர்தி வாலா,  மனோஜ் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தேர்தல் பத்திரங்கள் ஊழல்வாதிகளை பாதுகாக்கிறது என மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதத்தை முன்வைத்தார்..  மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, ’’பொதுமக்கள் எதை வேண்டுமானாலும் தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலை இருக்கக் கூடாது என்றும் நியாயமான கட்டுப்பாடுகள் தேவை எனவும்’’ வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 1-ம் தேதி ஒத்தி வைத்தனர். தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நவம்பர் 1ம் தேதி நடந்த விசாரணையில், ’’செப்டம்பர் 30 வரை கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திரத்தை,  தேர்தல் ஆணையம் சமர்பிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.  இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிந்து கடந்த நவம்பர் 2-ம் தேதி நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒருமித்த தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினர்.

தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

Representation of people act-ன் பிரிவு 29(1)(c) திருத்தம் மற்றும் ஐடி சட்டத் திருத்தம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது;  தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது.  தேர்தல் பத்திர விவரங்களை வழங்காமல் இருப்பதற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை.  தேர்தல் பத்திர முறைகளை ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags :
#StateBankofIndia | #Electoralbonds | #SBI | #Article19 | #ElectoralBondScheme | #SupremeCourtofIndiaElections2024India | தேர்தல் பத்திரம் | Article 19 | Parliament Election2024 | | Supreme Court of India |
Advertisement
Next Article